நினைவில் தவம்…!

கவிதை ஒன்று நானெழுத
தலைப்பு ஒன்று அனுப்பிவைத்தாய்.
உனக்குள் வந்து போவதெல்லாம்
எனக்குள் வருமா கவிதைகளாய்…?

வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.

தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.

சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே

பட்டுடுத்த மேனி என்பேன்..
பால் நிலவு தோற்றமென்பேன்
பூக்கள்கூட உனை கண்டால்
பொறாமை கொள்ளும் என்றிடுவேன்.

மென்மைச் சிரிப்பழகும்..
மேன்மைப் பேச்சழகும்..
பெற்றதனால் நீ எனக்கு
அழகிய தமிழும் ஆனாய்.

உன் கன்னக் குழிகழுக்குள்
கவிதைகளாய் பூத்திருக்க
கவிதை ஒன்று வேண்டுமென்று
கட்டளை ஏன் பிறப்பித்தாய்…

காரணமோ தெரியவில்லை இதை
யாரிடமும் கேட்கவில்லை…..
நவரசமாய் எனக்குள் நீ
நர்த்தனங்கள் தினம் செய்வதனால்.

முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா…?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்…

நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக் கொஞ்சம் கதைப்பதற்கு
நீண்ட நாள் யோசித்தேன்.
நிலவே உன்னை பார்ப்பதற்கு.

அழகு தமிழ் வார்த்தைகளை
அடுக்கடுக்காய் நான் கோர்த்து
வாய் உதிரும் புன்னகையால்
வான் உயர பாராட்ட

வானுயர நீ பறந்து
விண்மீனை நீயும் தொட்டு
நிலாவுக்கும் சொந்தம் என்று
என் நெஞ்சமதை குழப்பிவிட்டாய்

போதும் இது போதும்
புன்னகையால் எனை வாட்டியது
காணும் இனி காணும்
கனவுகளில் காதல் கொண்டதுவும்..

கீழ் வானம் சிவந்திருக்க
மேல் வானில் வந்திருந்து
வானத்து கன்னி நீ
விடியலுக்காய் காத்திருந்து
விடை பெற்று சென்றாயோ..
வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே…!

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7521

3 பின்னூட்டங்கள்

  1. iniyaval1 said,

    திசெம்பர் 22, 2007 இல் 9:45 பிப

    போதும் இது போதும்
    புன்னகையால் எனை வாட்டியது
    காணும் இனி காணும்
    கனவுகளில் காதல் கொண்டதுவும்..

    கீழ் வானம் சிவந்திருக்க
    மேல் வானில் வந்திருந்து
    வானத்து கன்னி நீ
    விடியலுக்காய் காத்திருந்து
    விடை பெற்று சென்றாயோ..
    வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே

    அழகான வரிகள் என் வாழ்த்துக்கள்

    http://iniyaval1.wordpress.com/

  2. rahini said,

    திசெம்பர் 29, 2007 இல் 2:15 பிப

    நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

  3. மதி said,

    ஜூன் 7, 2008 இல் 1:54 பிப

    தமிழ் வார்த்தைகள்..
    பிறக்குமிடம் தங்களைப்போன்ற..
    கவிஞர்களின் மனக்கருவறையில்தானோ…
    கவிதை தந்த வார்த்தைகள் அத்தனைக்கும் வாழ்த்துக்கள் சிவனேஸ்.


பின்னூட்டமொன்றை இடுக