சீதனம்.


அன்றுதொடக்கம் இன்றுவரை எமது சமுதாயத்திலே ஆழமாக வேறூன்றி ஆலவருட்சமாய் வளர்ந்து நின்று பெண்களை அடிமைகளாக்கி ஆட்டிப்படைக்கும் அரக்கன்தான் வரதட்சணை.

இக்கொடுமையினால் பருவத்தின் படிகளைத்தாண்டியும் வரதட்சணை கொடுக்க முடியாமல் தவித்து தங்களுக்கும் ஒரு வாழ்வு கிடைக்குமா….? என ஏங்கி நிற்கும் யுவதிகளோ ஏராளம்.

அழகும் அறிவும் பண்பும் இருந்தும் பணம் இல்லை என்பதனால் வரதட்சணை கொடுத்து வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமல் அவதிப்படும் மங்கையர் மனங்களை மாசு படுத்தும் ஓர் சமுதாயச் சீரழிவு அல்லவா இந்த வரதட்சணை.

இக்கொடுமையில் இருந்து மீழ்வோமா…? வாழ்வோமா…? என்று தினம் ஏங்கி விரக்தியின் விளிம்பில் நின்று வேதனைப்படும் சகோதரிகள் வடிக்கின்ற கண்ணீர்த்துளிகள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தனை.

இருந்ததைக் கொடுத்துவிட்டு பிறகு மிகுதி தருவதாய்ச் சொல்லி வசந்த காலங்களை மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் சொன்னபடி மிகுதி கொடுக்க முடியாமல் போனதனால் புகுந்தகத்திலிருந்து பிறந்தகம் வந்து வாழ்ந்தும் வாழாமல் இருப்பவர்களின் சோகக் கதைகளும் ஏராளம் ஏராளம்..

ஆனால் சீதனம் ஒரு சம்பிரதாயம் எனக் கருதும் பக்குவப்படாத மனித மனங்களை நினைக்கும் போதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இத்தகைய விந்தை மனிதர்களால் அன்று விதைக்கப்பட்ட சீதனம் என்ற விதைதான் விளைந்து இன்று படித்தவர் பாமரர் என்றும் பாராமல் பட்டி தொட்டி எங்கும் விழுதுகளூன்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இதில் ஆண்களை மட்டும் குறை கூறுவதும் தவறு. ஏனென்றால் சீதனம் கொடுத்துத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்போமென்று சொல்லுகின்ற பெற்றோர்களும் நிறைய உண்டு. இவர்கள் சீதனம் கொடுப்பதை தங்களுக்கு கௌரவமாக நினைக்கும்போது. சீதனம் வாங்கும் ஆடவரை இழிவு படுத்திப்பேசுவதும் அழகல்ல. என்பதும் என் கருத்து.

இருப்பதனால் கொடுக்கிறார்கள் அதனால்தான் வாங்குகுகிறோம் என்கிறார்கள் ஆண்கள். இவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொண்டால்.. சீதனம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் பெற்றோர்கள் என்ன செய்வது…? அவர்கள் தங்கள் பிள்ளைகளை வாழவைப்பது எப்படி…?
அதனால் அப்பெற்றோர்கள் அனுபவிக்கின்ற வேதனைகள்தான் எத்தனை…? வேதனையின் சுவடுகளை சுமந்து கொண்டு நிம்மதியிழந்து தினம் கண்ணீரும் கம்பலையுமாக வாழும்போது வாழ்க்கையே வெறுத்தல்லவா போகிறது…? இந்தநிலை மாறி இம் மனங்கள் சுகம்காண வேண்டாமா…?

அவர்கள் கொடுக்கிறார்கள் அதனால் நாம் வாங்குகிறோம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி.. சமுதாயத்தை சீரழிக்கின்ற கொடுமைகளை தகர்த்தெறிந்து வாழும்போது நேசக் கரம் நீட்டி சமுதாயம் எம்மையும் உள்ளன்போடு வரவேற்குமல்லவா…?

தீண்டத்தகாத பழையன நாம் மறந்தால்.. புதியன வந்து எமக்குள் புது மெருகு கொள்ளாதா…? எம்மால் முடியாதது ஒன்றுமல்ல. முடியுமென்று நினைத்துச் செயல்பட்டால் நிச்சயம் முடியும். சீதனம் எனும் கொடுமையினால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மங்கையர்களின் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் முலம் நல்லதொரு சமுதாயம் நாளை மலருமல்லவா…?

இளைஞர் சமுதாயம் சிந்தித்து செயல்ப்பட்டால் சீதன அரக்கனை ஏன் நாம் சிறைப்படுத்த முடியாது…? எம்மால் முடியும்… அப்போதுதான் இந்த சீதனம் என்ற சீரழிவிலிருந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு போயிருக்கும் எண்ணற்ற உள்ளங்கள் உவகை கொள்ளும்.

…சிவனேஸ்…

பின்னூட்டமொன்றை இடுக