ஓ…….இளைஞர்களே….
சிந்தியுங்கள் சிலநிமிடங்கள்
சீதன அரக்கனுக்கு
தீனி போட்டது போதும்.
மலர்ந்தும் மலராத
மலர்களாக
தம்மை எண்ணி…
மனதுக்குள் குமைந்து..
கனவுகளை கனலோடு கலந்துவிட்டு
கண்ணீர் வடிக்கும்
இந்த மலர்களை
எண்ணிப்பாருங்கள்.
இவர்களது சோகம் கண்டு
உங்களுடன் சேர்ந்திருக்கும்
சீதன அரக்கனும்
சிரிக்கிறான் இங்கு……!
மலராத மொட்டுக்களாய்
இம்மலர்கள் இருந்திருந்தால்
காதல் சுகம் தேடி
பாடும் தேனீக்களாய்
பறந்து சென்றும் பலனின்றி.
நாடி மர நிழலில்
தாடியுடன் இருந்திருப்போம்.
தம்பியரே சிந்தியுங்கள்…..!
பொறுமையின் பொக்கிசங்களாய்
காலம் பதில் சொல்லுமென…
காத்திருக்கும் இவர்கள்
விடியலைத் தேடிப்புறப்பட்டவர்கள்
திருமணச் சந்தையிலே
விலைமதிக்க முடியா இவர்களை
சீதன அரக்கன்
சிறைப்படித்தல் தகுமோ………?
கொடுப்பதனால் வாங்குகிறோமென
கூச்சமின்றி சொல்லுவதை நிறுத்தி
துணிவுண்டெனக்கு துணையைக் காப்பாற்ற
என மார் தட்டிச் சொல்லுங்கள்.
உங்களை வாழ்த்திடும்
கோடி மனங்களுள்
நானும் ஒருவனாய்
நன்றியுடன் இருப்பேன்.
…சிவனேஸ்…