ஓ மனமே….!

ஓ…. மனமே….!
வாழ்க்கைக்கு ஓர் துணையை
தேடுகிறாய் நீ…..
வரப்போகும் மனைவி
இப்படித்தான் இருக்கவேண்டுமென்று…
எப்படியெல்லாமோ கனவுகளில்…
சஞ்சரித்து மகிழ்கிறாய்.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும்
ஏன்……….
சொந்தமென்றால் பரவாயில்லை
இது பிறத்தியென்று…சொல்லி
தரகரிடமும் துருவி துருவி
விசாரித்து விளங்கியும்…
விளங்காததுபோல் தேடுகிறாய்
உனக்குள்ளே இன்னுமொருபெண்ணை.

இப்படி உன்னை
தினமும் ஏமாற்றி ..
இன்னும் எத்தனை நாள்
இப்படியே அலைவாய்……..?
உணர்ந்து கொள்வாயா….?
ஒன்றை மட்டும்…!

என் வாதம் தப்பென்று
நீ நினைத்தால் தப்புத்தான்…
ஆனாலும் என்வாதம் சரியென்று
எனக்குள்ளே நான் மகிழ்வேன்.

இந்த உரிமை
எங்களுக்கும் உண்டென்று …
நீ விரும்பும்
அந்த மங்கை…
உன்னை விரும்பாது போனால்
என்ன செய்வாய்…?

ஏக்கங்களும் தவிப்பும்
உன்னை வதைக்கும்.
நெஞ்சோரம் அமர்ந்திருக்கும்
நினைவுகளால் மனம்
நினைத்து நினைத்து அழும்.

வாடிய மலர்கள்
ஒருபோதும் மாலையாகாது.
இது படைத்தவர் இட்ட கட்டளை.
உன்னால் வாடிய மலர்கள்
மாலைக்காக ஏங்கும்போது
உன்னை வாழவும் விடாது.

சிந்திக்கத் தெரியாத
மனித மனங்களாலும்..
சிறைப்படுத்தி சிரித்து மகிழும்
சீதன அரக்கனாலும்
சினங்கொண்ட மங்கையரின்
உள்ளத்து குமுறல்களால்…
எனக்குள் தோன்றிய சிந்தனைகளை
இங்கே…
சில வரிகளால் கிறுக்கியுள்ளேன்…
இதை சரியென்பீர்களா …..இல்லை
பிழையென வாதிப்பீரகளா….?

… சிவனேஸ்…