அழுவதால் ஆறாது…!


சோகம் தோய்ந்த முகவரியை
தேடிச் சென்று அலைகிறாய்
நாடி உன்னை வந்தாலும்..
ஒடிச்சென்று நீ ஒதுங்குகிறாய்.

மனமே உன்னை மாற்றிக்கொள்
மறுபடியும் ஏன் கலக்கம்…?
மௌனமாய் நீ அழுதால்
ஆறாது இந்த வடு…

ஆளும் தினம் உன்னை
அழுவாய் நாள் தோறும்
ஆறுதல் யாரும் இல்லை
அழுவதற்கா நீ பிறந்தாய்

கேட்ட வரம் கிடைக்கவில்லை
துரதிர்ஸ்டம் இது என்றால்
அழுது என்ன பயன்
ஆரறிவார் உன் நிலையை..

பார்ப்பவர் பலர் சிரிப்பார்.
பார்த்து மேலும் தேய்வாய்
சேர்த்த சுகம் போகும்
சேர்ந்து மனமும் தவிக்கும்.

எடுத்துச் சொன்ன சிலவார்த்தை
ஏற்படுத்தியதா உனக்குள் மாற்றம்…?
மாற்றம் இன்னும் இல்லையென்றால்
மாற்ற இனி முயற்சிசெய்..

…சிவனேஸ்…

மௌனம் ஏன்…?

மௌனமாய் அழும் மல்லிகையே
உன்மனதை பறித்தது யார்…?
வாசம் அறியாத வண்டு..
மனவானை சுற்றி பறந்ததனாலா…?

முகம் அறியாமல் உன்னோடு
பழகிய சில நாட்களில்..
புரிந்ததனால் உன் சோகம்
தவிக்கிறது மனமோ தினமும்.

கோடையில் மழை தூறுமென்கிறாய்
மாரியில் வெயிலென்று வேதனைப்படுகிறாய்.
வெளியில் சொல்ல வெட்கப்படுகிறாய்..
வேதனைகளை உனக்குள்ளே சுமக்கின்றாய்.

ஏக்கங்கள் தந்த தாக்கங்களினால்
சேர்ந்தது உனக்குள் சோகங்களா…?
சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்…?
வர்ணிக்க முடியாமல் வாடுவது ஏன்…?

வாய் விட்டு அழத்தோன்றியும்
உனக்குள்ளே சமாதானம் செய்து..
அமைதிப்படுத்தியும் முடியாமல் நீ..
முகவரியை தினம் தேடுகிறாய்.

முடிந்துபோன கதைகளை எண்ணி
மனம் நொந்து தேய்கிறாய்.
இன்று நீ தேய்பிறையானால்…
நாளை நீ வளர்பிறையல்லவா.

வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மலரே கலைத்துவிடு மௌனத்தை.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7202

சுகமான காதல்..!

ஒற்யையடிப் பாதையிலே
ஒருநாள் சந்தித்தோம்.
மறுமுறை சந்திக்க
விடுமுறையை தேடினேன்.

சிரித்தாய் உனக்குள்
கதைத்தேன் எனக்குள்.
மாதங்கள் ஓடின
மலருன்னை தேடின.

மறுபடியும் எப்போ
சந்தர்ப்பம் கிடைக்கும்
மயிலே உன்னோடு
மனம்விட்டு பழகிட..

வாடியது மனம்
தேடியது உன்னை
தேடாமல் வந்தாய்
தேவதை ஒருநாள்.

குவிந்தது சந்தோசம்
கூவியது மனது.
கேட்டதோ உனக்கும்
காதலையும் சொன்னாய்

ஈழத் தீவில்
எனக்காகாய் பூத்து
எத்தனை இன்பம்
எனக்குள் தந்தாய்.

கொஞ்சிப் பழகி
கெஞ்சித் திரிந்து
மிஞ்சும் வாலிப
சுகங்களை கண்டோம்.

பேராதனையில்….
நுழைவு கிடைக்க
காதலை வளர்க்க
கூடமும் அமைத்தோம்.

கொழும்பு நகரில்
சுற்றித் திரிந்து
பசுமை நினைவுகள்
பகிர்ந்தும் உண்டோம்.

காலித் திடலும்
மாலைப் பொழுதும்
மனதை கவர்ந்து
மங்கை மகிழ..

எட்டுத் திசையும்
என்னவள் முகமாய்
பட்டுத் தெறித்து
பலகதை சொல்ல..

நெஞ்சக் கூட்டில்
நினைவுகள் தாங்கி
விடியும் வரைக்கும்
கற்பனை சேர்க்க..

பொழுதும் விடிய
போய்விடும் நினைவை
கட்டி இழுத்து
எனக்குள் பூட்ட..

விடுவிடு என்றாய்
படபட என்று
பயந்த முகத்தை
பார்த்துச் சிரித்தேன்.

கடுகடுப்புடனே ….
காதில் சொன்னாய்
காதலைப் பற்றி
கொஞ்சும் தமிழில்..

புரிந்தது உனக்கு
புரியாமல் இருந்தது
புதிராக இருந்தது
எனக்குள் வெட்கம்.

போகட்டும் என்று
புறந்தள்ளி விட்டு
பூவே உன்னை
புரட்டிப் பார்க்க..

பொழுதும் விடிய
நினைவுகள் நகர..
கண்களும் சிவந்து
விழித்துக் கொள்ள..

காதலைப் பற்றி..
காதில் சொன்னது.
உண்மை என்று…
உள்ளமும் சொன்னது.

சிரிப்பும் வந்தது.
சிந்தனை சுழன்றது.
என்மனக் கட்டளை
உனக்கும் சொல்ல..

சொன்னேன் ஒருநாள்
சிரித்தாள் பலமுறை
இதுதான் காதல்
இப்படித்தான் இருக்குமென்று.

ஏக்கங்கள் தாக்கின
இரவுகள் நீண்டன..
ஏனோ எனக்குள்
புரியாத போராட்டம்.

இப்படி இருக்க..
ஒருநாள் சொன்னாள்.
தேவதை சொன்னது.
தேனாக இருந்தது.

காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.

சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.

சொன்னதும் எனக்குள்
சுகமாக இருந்தது.
காதலில் வெற்றி
கண்ட மகிழ்ச்சி.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7151

நம்பிக்கை வேண்டும்.

எழுது எழுது என்று..
மனம் பலமுறை தூண்ட
எழுதுகோலை நான் எடுத்து
எழுத ஆரம்பித்து சிலகணங்கள்..

எழுத ஒன்றும் வரவில்லை
ஏனோ எனக்கும் தெரியவில்லை.
சிந்தனைக்குள் வந்து நின்று
மகிழ்விக்கும் சில காட்சிகளோ
ஒத்து வராமல் ஒதுங்கிநிற்க…!

மனம் சொல்ல மறுபடியும்
மனக்கணக்கு நீண்டு நகர்கிறது.
மாயக்கண்ணாடிக்குள் மனிதர்களின்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதுதான்.

உண்மையை ஒருகணம் எழுதினால்
சில மனங்கள் குழம்பிப்போகும்.
பொய்யை பலமுறை எழுதினால்
பலமனங்கள் மகிழ்ந்து சிரிக்கும்.

எனக்குள்ளே எழுகின்ற சிந்தனைகள்
எடுத்துச்சொல்ல முடியாமல் தவித்தாலும்
ஒருசில வரிகளை மட்டும்
கிறுக்கியது என் எழுதுகோல்.

விரிந்து கிடக்கிறது பாரபட்சம்
இனி விடியுமென்று நினைப்பதும்
அது முடியுமென்று கதைப்பதற்கும்..
உள்ளங்கள் ஊனமாகாமல் இருக்கவேண்டும்.

ஊனப்பட்ட உள்ளங்கள் எடுக்கின்ற…
உருப்படாத சில முடிவுகளால்தான்
உயர்வு தாழ்வுகள் தலைதூக்கும்
உறங்காமல் மனங்களும் மனம்சோரும்.

ஏன் இந்தக் கோலங்கள்
எதற்காக இவ் அவலங்கள்
ஒத்து வராத வேசங்களை
ஒதுக்கி வைத்தால் என்ன…?

சில நொடிப் பொழுதை
எமக்காக நாம் ஒதுக்கி
நம்மன அழுக்குகளை கழுவினால்
மாசற்றுத் திகளாதோ உள்ளம்.

சிந்தித்தால் முடிவு வரும்
நாளைய பொழுதும் நல்லதாய் …
மலர்ந்து மணம் வீசும்
என்ற நம்பிக்கையும் இருந்தால்

ஆழ் கடல் நடுவிலும் …
அலை அடித்துச் சென்றாலும்
திசைமாறாது அசைந்து செல்லும்
வாழ்க்கை எனும் பயணம்.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

எனக்காக…!

ஆகாய கங்கையில்
நீராடும் மங்கையே..
நினைவுகளை இங்கு
ஏன் விட்டுச் சென்றாய்…?

எட்டாத பழம் என்று
எட்டி எட்டி நின்றபோதும்
ஒட்டி ஒட்டி வந்து
உறவொன்றை வளர்த்தவளே…

புரியாத நிலவொளியே..
புதிர் போடும் புன்னகையே
எதிர் வீட்டு யன்னலிலே
எனக்காக பூத்தவளே..

திரும்பும் திசைகளெல்லாம்
தெரிகிறது உன் முகம்
கண்களால் சிரிக்கின்றாய்
கவிதைகளாய் மலர்கின்றாய்.

ஏக்கங்களை சுமக்கின்றேன்
எனக்குள்ளே தவிக்கின்றேன்.
எதற்காகத் தெரியுமா…?
நீ.. எனக்காக என்பதற்காய்.

…சிவனேஸ்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7096