அம்மா.

பாலுக்கு அழும் குழந்தை
பசி என்று சொல்வதில்லை.
தாய் உணர்ந்து கொள்கையிலே
பசி மறந்து மகிழ்கிறது.

தன் பசியும் கண்டிடாமல்..
காத்திரமாய் தான் இருந்து
கண் விழித்து பார்த்திடுவார்
பாலகனை வளர்ப்பதற்கு.

பிஞ்சு விரல் தொடுகையிலே
பேருவகை கொண்டிடுவார்.
அம்மா என்றழைக்க..
அகம் மகிழ்ந்து போய்விடுவார்.

பிள்ளைப் பருவமதில்..
பிறர் தூற்ற விடமாட்டார்.
பெருமை சேர்க்கும் பிள்ளையென
பெருமிதமும் கொண்டிடுவார்.

பள்ளிப் பருவத்தில்..
ஆசானாய் அவரிருந்து..
கல்விச் செல்வத்தை
கனிவோடு புகட்டிடுவார்.

வாலிபப் பருவமதில்
வரம்பு மீற விடமாட்டார்.
தண்டிக்க நினைத்தாலும்_ தந்தை
தடுத்திடவே நினைத்திடுவார்.

அன்புப் பால் ஊட்டி..
அணைத்து வளர்த்திடுவார்.
ஆளாக்கி வைப்பதற்கும்
அரும்பாடு பட்டிடுவார்.

தாய்க்குத் தலைமகனாய்
தான் பெற்ற பிள்ளையினை..
ஊர் போற்றும் உத்தமனாய்
உருவாக்கத் துடித்திடுவார்.

ஆழமான அன்பும்
அரவணைக்கும் குணமும்
ஆண்டவன் எமக்களித்த
அருங்கொடைதான் அம்மா.

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=6559

மறுமொழியொன்றை வழங்குக