நெஞ்சுக்குள் நீ…!

எனக்காக நீ மலர்ந்தாயென்று
எனக்குள்ளே எத்தனை ஆனந்தம்..
நெஞ்சுக்குள் நீ இருந்து..
நினைவுகளை மீட்பதனால்..
துள்ளல் இசை பாடி
மனம் தினமும் மகிழ்கிறது..!

ஆனால்…
உனது உள்ளம் மட்டும்..
ஊமையாய் இருப்பதனால்
காலத்தின் கட்டாயத்தால்
என் காதலும்
காலாவதி ஆகிடுமோ..
என்றெண்ணி … எனக்குள்ளே..
காதல் குறியிட்டு
காதல் கணக்கொன்றை
வகுத்துப் பார்த்தும்.. விடையாக..
உன்பெயர்தான் வந்ததுவும்..
ஏன் கண்ணே…..?

…சிவனேஸ்…

அன்னை.

பத்துமாதம்   கருவறையில்..
பக்குவமாய்   பாதுகாத்து.
பத்தியங்கள்   பல  இருந்து.
ஈன்ற   கணப்பொழுதில்
ஏற்பட்ட   வலி  மறந்து.
தான்   பசி  இருந்து
தன்னுயிர்  உள்ளவரை..
உள்ளன்போடு  அரவணைக்கும்.
தாய்க்கு   நிகர்..
தரணியிலே    யாருமுண்டோ…?

…சிவனேஸ்…

கிறுக்கல்கள்…!

இங்கு வருகை தந்தமைக்கு நன்றி.

…சிவனேஸ்…

காதல் வளர்ப்போம்.

இளமை எட்டிப்பார்த்ததனால்
மனம் தட்டிப்பார்த்தது
உன் இதயத்தை.

கட்டிப்போட்ட என் ஆசைகளை..
கட்டவிழ்த்துப் பார்த்து
கவிதை பாடச்சொன்னது
உன் இளமை.

இளமையின் எதிர்பார்ப்பால்..
நமக்குள் ஏற்பட்டது காதல்.

காதல் அறுவடைக்காய்
காத்திருக்கும் காதலர்களுள்
நாமும் காதலர்களாய்..
காத்திருந்து காதல் வளர்ப்போம்.

…சிவனேஸ்…

விடியும்வரை….!

சொந்தங்கள் ஏதுமின்றி
சுதந்திரமும் நாமிழந்து
தவிப்புகளை சுமந்துகொண்டு
அந்நிய தேசமொன்றில்
அகதியென்ற வாழ்வு…!

நினைக்கையிலே கனக்கிறது.
நெஞ்சமெனும் கூடு.
இழந்துவிட்ட சுதந்திரமும்..
ஏற்பட்ட வலியினையும்..
மறந்திடவும் முடியாமல்
மனமேங்கி அழுகிறது.

மாறுபட்ட எண்ணங்கள்
மனதுக்குள் நிழலாட ..அங்கு
மறுபடியும் வருமென்று
வசந்தத்தை எதிர்பார்க்கும்..
வாடி நிற்கும் மனங்களுக்கு
மகிழ்ச்சி தரும்
நாள் வருமா…?

அந்நிய மண்ணெமக்கு
ஆரோக்கியமாய் இருந்தாலும்..
சொந்த மண்ணின் சுகங்களும்
தொடர்கதையான உறவுகளும்
எங்கு சென்றாலும்
ஈடாகுமா….? எமக்கு.

குமுறிடும் நெஞ்சுக்குள்
கொழுந்து விட்டெரியும்..
நினைவுகள்..
அந்த விடியலுக்காய்
எத்தனை நாள் இன்னும்
தவித்திருந்து வாடுவது….?

காலமே கண்டுகொண்டு..
இக்கண்ணீர் கதைகளுக்கு
வைப்பாயா முற்றுப்புள்ளி….?
காத்திருந்து பெற்ற சுதந்திரம்..
கண்டு மனங்கள் களிப்படைய…?

…சிவனேஸ்…
www.thamilworld.com/forum/index.php?showtopic=6077

தூது போ தென்றலே …!

உன்நினைவுகள் என்னை..
வாட்டுவதால்
நிழற்படமாய் நீ தோன்றினாலும்
என் காதலை ஏற்றுக்கொள்வாயா….?
எனும் தவிப்பினால்
நெஞ்சகத்துள் ஒரு படபடப்பு.

துணிச்சலற்ற காதல்
துடுப் பிழந்த படகைப்போல்
தண்ணீரில் தள்ளாடும்.
தானாக கரை சேருமா….?

துணிவு வேண்டும் இதற்கும்
மனச் சாட்சி சொல்கிறது.
இல்லையென்றால்….
மணவாழ்வு உமக்கு
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது
நன்றென்று.

ஆனாலும்……………
துள்ளும் இளமையினால்
இதயத்துள்..
துளிர் விட்ட காதல்
மலரே உன்னை
மனச்சிறையிலடைத்து
மகிழ்ந்து கொள்கிறதே
என் காதலை
யாரிடத்தில் தூதனுப்ப ….?

தென்றலிடம் சொல்லுகிறேன்.
வந்து சொன்னால்
பதில் அனுப்பு
அதுவரைக்கும் காத்திருப்பேன்….!

…சிவனேஸ்…
www.thamilworld.com/forum/index.php?showtopic=77

இதுதான் உலகம்…!

கண்ணே மணியே என்பார்.
தேனே திரவியமே
தெவிட்டாத   தெள்ளமுதே
நீயின்றி என்வாழ்வு
கானல் நீராகிவடும்
கனியமுதே என்காதலை
ஏற்றுக்கொள்வாயா….?

என்றெல்லாம் கூறி
தன் வாலிபப் பசிக்கு
இரைதேடத் துடித்திடுவார்.

காலம் கைகொடுத்தால்
மண மேடையில்
உனை இருத்தி
அருந்ததி பார்த்து
அக்கினி சாட்சியுடன்
மாலையிட்டு மனைவியாக்கி
மகிழ்ந்தும் கொள்வார்.

ஆனால்..
சொன்னபடி சீதனம்
வந்து சேராவிட்டால்
உன்னை சினக்கவும்
தயங்கார் பெண்ணே….!
இதுதான் உலகம்.

…சிவனேஸ்…

ஓ மனமே….!

ஓ…. மனமே….!
வாழ்க்கைக்கு ஓர் துணையை
தேடுகிறாய் நீ…..
வரப்போகும் மனைவி
இப்படித்தான் இருக்கவேண்டுமென்று…
எப்படியெல்லாமோ கனவுகளில்…
சஞ்சரித்து மகிழ்கிறாய்.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும்
ஏன்……….
சொந்தமென்றால் பரவாயில்லை
இது பிறத்தியென்று…சொல்லி
தரகரிடமும் துருவி துருவி
விசாரித்து விளங்கியும்…
விளங்காததுபோல் தேடுகிறாய்
உனக்குள்ளே இன்னுமொருபெண்ணை.

இப்படி உன்னை
தினமும் ஏமாற்றி ..
இன்னும் எத்தனை நாள்
இப்படியே அலைவாய்……..?
உணர்ந்து கொள்வாயா….?
ஒன்றை மட்டும்…!

என் வாதம் தப்பென்று
நீ நினைத்தால் தப்புத்தான்…
ஆனாலும் என்வாதம் சரியென்று
எனக்குள்ளே நான் மகிழ்வேன்.

இந்த உரிமை
எங்களுக்கும் உண்டென்று …
நீ விரும்பும்
அந்த மங்கை…
உன்னை விரும்பாது போனால்
என்ன செய்வாய்…?

ஏக்கங்களும் தவிப்பும்
உன்னை வதைக்கும்.
நெஞ்சோரம் அமர்ந்திருக்கும்
நினைவுகளால் மனம்
நினைத்து நினைத்து அழும்.

வாடிய மலர்கள்
ஒருபோதும் மாலையாகாது.
இது படைத்தவர் இட்ட கட்டளை.
உன்னால் வாடிய மலர்கள்
மாலைக்காக ஏங்கும்போது
உன்னை வாழவும் விடாது.

சிந்திக்கத் தெரியாத
மனித மனங்களாலும்..
சிறைப்படுத்தி சிரித்து மகிழும்
சீதன அரக்கனாலும்
சினங்கொண்ட மங்கையரின்
உள்ளத்து குமுறல்களால்…
எனக்குள் தோன்றிய சிந்தனைகளை
இங்கே…
சில வரிகளால் கிறுக்கியுள்ளேன்…
இதை சரியென்பீர்களா …..இல்லை
பிழையென வாதிப்பீரகளா….?

… சிவனேஸ்…

வேண்டும் ஒரு வரம்…!

ஓ…. இளமையே…!
நீ என்னிடமிருந்து
விடை  பெறாதிருக்க
வேண்டுகிறேன் ஒரு வரம்…!

ஏனெனில்……..
நீ என்னுடன்
இருக்கும் போதுதான்
எனது இளமையின்
கனவுகள் நிறைவேறும்.

நீ பிரிந்துவிட்டால்..
நிராசைகளானவற்றை
நினைத்துப் பார்த்து
மீண்டுமொரு வசந்தம்
வந்தென்னுள் வீசுமென்று..
தப்பாக கணக்கிட்டு..
மகிழவும்.. நான்
தயாராக இல்லை.

முதுமை வந்துவிட்டால்
எனக்கும் உனக்குமிடையில்
முட்கம்பி வேலியமைத்து
எல்லை போடும்.
பின்பு…
உன்னை எனக்குள்
எட்டிநின்று பார்க்கவும்
இடமளிக்காது.

ஆகையினால்….
இறந்த காலங்களை
எண்ணி மனம்
கவலை கொள்வதைவிட..
எதிர்காலத்தைப் பற்றி
நினைத்து மகிழ்வதேமேல்.

இப்படி மனம்
நினைப்ப தனால்தான்
வேண்டுகிறேன் ஒரு வரம்
இளமையே நீ
என்னிடமிருந்து விடைபெறாதே….!

…சிவனேஸ்…

www.thamilworld.com/forum/index.php?showtopic=2443

மலராத காதல்.

அன்பே…..!
மௌனம் கலைவதெப்போ…..?
மன்னன் மனம் மகிழ்வதற்கு.
சோகம் கலைவதெப்போ…….?
நீ…… என்
சொந்தக்குயில் ஆவதற்கு.

நமக்குள்ளே ஓருறவு
துளிர்விட்டு பல்லாண்டு…
இவ்வுறவை வெளிப்படுத்த…
யார்முதலில் என்பதுதான்
நமக்குள்ளும்   ஒரு போட்டி..

நல்மனங்கள் பயப்படும்தான்….!
நாமறிந்த காதலிது.
ஆனாலும்….
நினைவுகளை சுமந்துள்ளம்
எத்தனைநாள் வாடுவது.
சொல் கண்ணே…….?

உன்காந்த விழிபட்டு
கவர்ந்திட்ட….
என் இதயம்
களிப்படைந்து துள்ளியதை
எப்படி நான் எடுத்துரைக்க…

நினைவுகளால் உனைவடித்து
நெஞசிற்குள் மறைத்துவைத்து
நான் காணும் கனவுகள்
நனவாகும் நாள் வருமா…..?

காலம் நம்முறவை
கண்டு கரைசேர்க்குமென..
காத்திருந்தால்
நெஞ்சில் விழுந்திடுமோ
திரை என்று
கொள்ளுது மனம் பீதி..

காதல் பதியம்வைத்து
காத்திருந்த இதயம்
கலங்குவது கண்டு
உதிராதோ உன் உதட்டால்
ஒரு வார்த்தை
நம்முறவு நிஜமென்று.

…சிவனேஸ்…

www.thamilworld.com/forum/index.php?showtopic=1931

« பழைய வரவுகள்