புயலுக்கு இரையாகிய பூ…..!

தாரணியின் கடந்தகால வாழ்வின் கசப்பான நிகழ்வுகளுக்கு முத்தாய்ப்பு இடுவதுபோல் இருந்தது அந்தக் கடிதம்.

ஆனாலும் அவள் மனம் மறுத்தது. இளமைப்பருவத்தின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகியதால் மணவாழ்க்கையுடன் மரணித்துவிட்ட உணர்வுகளை அவளால் ஜீரணித்துப்பார்க்க முடியவில்லை.

தாரணி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். இயற்கை எழிலோடு இறையருளும் மிகுந்தது அவளது கிராமம்.
தாரணியின் தந்தை கனகசபை.. வியாபாரத்தோடு சிறு விவசாயமும் செய்து வந்ததால் அவர்களது குடும்பம் ஓரளவு வசதியாகவே காணப்பட்டது.

தாரணி குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குக் கீழ் இன்னுமொரு தங்கை வரணி கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபெறுக்காக காத்திருந்தவள். தாய் பார்வதிக்கு உதவியாக இருந்து வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.

ஆயினும் வரணியும் பருவத்தின் படிகளைத் தாண்டிக் கொண்டிருப்பதால் தனது இரு பிள்ளைகளினதும் எதிர்காலங்களைப் பற்றியே தினமும் சிந்தித்துக் கொண்டிருந்தது அந்தத் தாயுள்ளம்.

தாய்மையின் எதிர்பாரபபுகள் இத்தகையதாய் இருந்த போதிலும்; தாரணியோ தான் பிறந்து வளர்ந்துகல்வியில் கலங்கரையாய் திகழவைத்த தன் கிராமத்துக்கு இயன்றளவு நற்பணி செய்ய வேண்டுமென்பது ஆவளது ஆசை.
அதுபோலவே பள்ளிப் பருவத்திலேயே அக்கிராமத்து நற்பணி மன்றம் ஒன்றின் உப தலைவியாகவும் இருந்தாள்.

தனது மகளின் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள உணர்வுகளைக் கண்டு தந்தையின் உள்ளம் உவகை கொண்டாலும் குறுகிய நோக்கம் கொண்ட சில அரசியல்வாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இத்தகைய நற்பணி மன்றங்கள் பயனளிக்காது என்பது அவருக்குத்தெரியும். இருந்தாலும் மகளது நன் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க அவர் விரும்பவில்லை.

காலச்சக்கரம் சுழன்றது. ஆளுமையின் பிடிக்குள் சிக்கி அவஸ்தைப்பட்டது அந்தக் கிராமம். அங்கிருந்து பிரதான நகரங்களுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. வேளாண்மையை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் விளைந்த பயிர்களை சந்தைப்படுத்த முடியாது தவிக்க அவரவர் குடும்பங்களும் வறுமையினால் வாடின. இது தாரணியின் பெற்றோர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன….? அங்கும் வறுமை கோலம்போட ஆரம்பித்தது. கூடவே தந்தையின் உடல் நிலையிலும் சற்று மாறுதல் தோன்ற உழைப்பால் உரமேறிய உடம்பில் திரண்டு தினவெடுத்திருந்த தசைகள் ஓய்வு கேட்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

குடும்பத்தில் நிலவிய வறுமை தகப்பனின் இயலாமை இவைகளுக்கு மத்தியில்தான் தாரணியின் கல்வித் தகைமைக்குத் தக்க தொழில் அவளைத் தேடிவந்தது அயலூர்க் கம்பனி ஒன்றில் அவளுக்குக் கிடைத்திருந்த காசாளர் பதவியினால் ஏற்பட்ட சந்சோசத்தைவிட தன் கிராமத்தை விட்டுப் பிரியப்போகிறேனே என்ற வேதனைதான் அவளிடத்தில் மேலோங்கி நின்றது. ஆனாலும் அவளுக்குப் பின்னால் உள்ள சுமைகளின் நிமித்தம் அங்கு சென்று கடமையைப் பொறுப்பேற்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

வேலைக்கு அமர்ந்து சில மாதங்கள் கரைந்து செல்ல தாரணியின் வருமானத்தினால் வறுமை நிலையில் இருந்து அவர்களது குடும்பம் விடுபட்டு மகிழ்ச்சி நிலவியது. ஆனாலும் மகளது உழைப்பினால் தனது குடும்பம் வாழ்வதையும் தனது இயலாமையையும் எண்ணி தந்தையின் உள்ளம் குமுறியது . தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்துகொண்டு சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு ஒழுக்க சீலராய் வாழ்ந்த ஒருவருக்கு காலத்தின் தேவையறிந்து செய்யவேண்டிய தனக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் போனதனால் ஏற்பட்ட வேதனைகளை வெளிப்படுத்தமுடியாமல் தனக்குள்ளேயே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது அந்த உள்ளம்.

இந்த வேளையில்தான் தாரணியின் பருவ வாழ்வினில் புயலொன்று வீசியது.

தாரணி வேலைபார்க்கும் அதே கம்பனியில் பணிபுரியும் தூயவன் என்ற இளைஞன் அவள் வீது மையல்கொள்ள ஆரம்பித்தான்.இனம்புரியாத இந்த உறவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க எண்ணினாலும் முடியாது தவித்தாள் தாரணி. தூயவனின் அன்பு கலந்த வார்த்தைகளுக்கு அடிமையாகிவிட்ட அவளது இதயம் அந்தப் புனிதமான உறவுக்கு மறுப்புத்தெரிவிக்க மறுத்தது.

ஆனாலும் வயதாகிய அப்பா …அம்மா தனது எதிர்காலமே என் கையில்தான் என கனவு காணும் தங்கை.. இவைகளுக்கு மத்தியில் தனது கழுத்து மட்டும் மாங்கல்யம் கேட்பதை நினைக்கும்போது பயமாகவும் இருந்தது.

இருந்தாலும் தனது சுகபோகங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி தூயவனின் உள்ளத்திலே அரும்பாகிய இந்த உறவு இல்லறம் என்ற இனிய பூங்காவினுள் மலர்ந்து மணம் வீசவேண்டும் என்பதே அவளது ஆவலாகவும் இருந்தது.

கருத்தொருமித்து காதல் வயப்பட்ட இதயங்கள் களிப்படைந்திருந்தவேளையில் வதி இவர்களைப் பார்த்து சிரித்ததோ என்னவோ…விசயம் தூயவனின் தந்தை கைலாசத்தின் காதுகளை எட்டியது. செய்வதறியாது திகைத்து நின்ற அவர்.. தனது அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் ஏற்படப்போகும் இழுக்கு என எண்ணினார்.

கைலாசம் பிரபல தொழிலதிபர் தென்னிலங்கையில் வசிக்கும் மிகப் பெரிய செல்வந்தர்களுள் இவரும் ஒருவர். அங்கு இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் சிங்களக் கிராமங்களில் தனது பணபலத்தால் பாதுகாப்பாக வாழ்ந்தவர்.

குடியிருப்பதற்கு அரண்மனைபோல் வீடு..அதைச்சுற்றி பூந்தோட்டம். இவைகளைக் கவனிக்க வேலையாட்கள். உல்லாசமாய் திரிவதற்கு கார். இவற்றை அனுபவிக்க ஒரே வாரிசாக தூயவன். இத்தகைய சுகபோகங்களை அனுபவிப்பதற்கு இந்த வீட்டிற்குள் வரும் மருமகள் எத்தகையவளாய் இருக்கவேண்டும் என்று மனப்பால் குடித்தவர் இந்த கைலாசம்.

இப்படிப்பட்ட மனிதநேயமற்ற மனிதருக்கு மகனாகப் பிறந்த தூயவன் ஏழ்மையை விரும்புபவனாகவும்.. தான் பிறந்த மண்ணை நேசிப்பவனாகவும் இருந்தது கைலாசத்தின் வரட்டுக் கவுரவத்திற்கு தடைக்கல்லாக அமைந்தது.

இருந்தபோதிலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு காலத்தை ஓட்டிய அவருக்கு மகனது காதல் விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தது.

நெஞ்சினுள் ஆர்ப்பரித்தெழுந்த ஆத்திரத்தை அடக்கமுடியாமல் தவித்த கைலாசம் தாரணியின் பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்தியதோடு பெரிய இடத்தில் சம்பந்தம் கலப்பதற்கு சில தகுதிகளும் தேவை என்று கூறி எச்சரிக்கை செய்தார்.

இதைக் கேள்விப்பட்ட தாரணியின் பெற்றோர் தங்கள் ஏழ்மைக்கு ஏற்றட்டிருக்கும் சோதனை என எண்ணி மிகவும் வேதனைப்பட்டனர். வேதனையின் நெருடல்களால் நொந்துபோய் இருந்த அவர்களது உள்ளத்தை கைலாசத்தின் சொல் அம்புகளும் சதா புண்படுத்தவே..உள்ளூர்த் தரகரின் உதவியுடன் தங்கள் வசதிக்கு ஏற்றவரனைத்தேடி நிச்சயதார்த்தத்திற்கும் நாட்குறித்து விட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட தாரணிக்கு தன் இதயத்துடிப்பு நின்றுவட்டதைப்போன்ற பிரமை ஏற்பட்டது. இதயத்தில் வைத்து பூசித்தவரை உதறித்தள்ளிவிட்டு இன்னொருவருடன் வாழ்க்கை நடாத்துவதற்கு அவளால் இம்மியளவும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஆனால் பெற்றோரின் அன்புப்பிணைப்புக்குள் வாழ்ந்த அவளுக்கு அவர்களது வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் மனவலிமையும் இல்லை. எதையோ சொல்ல நினைத்தும் முடியாது தவித்த மகளது உள்ளத்து உணர்வுகளைப் புரிந்துகொண்ட தாயுள்ளம்…

“எல்லாம் தெரிந்த பின்பு தானம்மா நாம் இந்த முடிவுக்கு வந்தோம். குடிசையில் வாழ்பவர்கள் நாம். கோபுரத்தில் இருப்பதற்கு ஆசைப்படலாமா.”…..? என்றார்.

“அருண் மிகவும் நல்ல பையன். அவரை நீ திருமணம் செய்வதன் மூலம்… உன் தங்கையின் நல்வாழ்வும் நல்லதாய் அமையுமென நாம் நம்புகிறோம்.” என்று நா தளதளக்க கூறிய தந்தையின் வார்த்தைகளையும் செவிமடுத்த அவளுக்கு மேற்கொண்டு எதுவுமே சொல்ல முடியாது மனம் தவித்து நிற்க… அந்தத் தவிப்புத்தாங்க முடியாமவ் அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த்துளிகளை மட்டும் தன் காதலுக்கு காணிக்கையாக்கிவிட்டு.. பெற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தனக்கு மனநிறைவைத் தரும் என நம்பினாள்.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது……
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் இனிதாய் நகர்ந்துகொண்டிருக்க..அன்று நிகழ்ந்த அந்த ஆழிப்பேரலை அனர்த்தம் அருணினது உயிரையும் காவு கொள்ள ..தாரணி பூவையும் பொட்டையும் இழக்க நேரிட்டது.

செய்தி கேட்டதும் அதிர்ச்சி தாங்க முடியாமல் தாரணியின் தந்தையின் உயிரும் பிரிய… விவைத்தாயுடன் அவளும் அங்கே நிர்க்கதியாய் நிற்க சொந்த பந்தங்கள் தாரணி தாலிபாக்கியம் இல்லாதவள் என்று நச்சரிக்க.. எச்சரிக்கை செய்வதுபோல் வந்தது அந்தக் கடிதம். அதில் தூயவன் கையொப்பம் இட்டிருந்தான்.

அன்புள்ள தாரணிக்கு..
பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்ட உன் நினைவுகள் என் நெஞ்சத்திரையில் இருந்து நீங்க மறுப்பதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உனது வாழ் வினில் வீசிய கொடிய சூறாவளிக்கு உன் எதிர்பார்ப்புக்களும் இரையாகிப்போனதையிட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். ஆனாலும்… தரிசனத்திற்கு உதவாத சாக்கடைப் பூ என்று கூறி உன்னை ஒதுக்கிவைத்து.. வேடிக்கை பார்க்கும் உனது சொந்த பந்தங்களுக்காகவாவது.. நீ மஞ்சள் குங்குமத்துடன்.. தீர்க்க சுமங்கலயாய் வாழவேண்டுமென்பது எனது ஆசை. உனது இதயத்தில் எனக்கொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தால்…! அன்பே…. நீ என் உயிரோடு கலந்துவிடு. என்று எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தில் எழுப்பட்டிருந்த வாசகங்கள் வலுவிழந்து நிற்கும் இதயத்திற்கு இதமாக இருந்தாலும் உள்ளத்தால் களங்கப்பட்டுப்போன அவள் மீண்டும் ஒரு புனிதமான இதயத்தைமாசுபடுத்த விரும்பாமல் அருணின் நினைவுகளுடனேயே வாழ விரும்பினாள்.

சிறு வயதில் சமுகப் பணிகளில் அவளுக்கிருந்த ஆர்வத்தினால் தன்னை ஒரு சமுக சேவகியாக்குவதன் மூலம் தனக்கு உள்ள மனச் சுமைகள் குறையும் என எதிர்பார்த்த அவள் தன்னைப்போன்ற அபலைப் பெண்கள் தங்கி இருக்கும் அந்த மறுமலர்ச்சி இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அங்கேதான் அவளது கடந்த கால காதல் வாழ்வில் முற்றுப் பெறாமல் முடங்கிப்போய்க் கிடந்த “காதல்” என்ற புத்தகம் நிறைவு பெறக் காத்திருந்தது.

வாழ்விழந்து நிர்க்கதியாய் நிற்கும் இளம் வதவைகளுக்கு மறுவாழ்வளிக்க விரும்பி விண்ணப்பித்திருந்த தியாகி உள்ளம் படைத்தவர்களின் பெயர்ப்பட்டியலில் தூயவனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

விதிவசத்தால் இருதுருவங்கள் ஆக்கப்பட்ட இவர்ககள் நிச்சயம் ஓருநாள் ஒன்றுசேருவார்கள்.

…சிவனேஸ்…

(ஈழமுரசு   வாரமலர்  பாரிஸ்-03.06.1999)

www.thamilworld.com/forum/index.php?showtopic=2121

மறுமொழியொன்றை வழங்குக