தாயகக்கனவுகள்.

(2002 ஆம் ஆண்டு பாரிஸ் ஈழமுரசு நடாத்திய சிறுகதைப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை. 12_12_2002)
                 “”"”"”"”"”"”"”"”"”"”"”

பனிக்காலம் தொடங்கிவிட்டதனால் ‘ஜில்’ என்று வீசும் குளிரை தாங்கிக்கொள் முடியாத ஆனந் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டபடி சாளரத்தினூடே உற்றுநோக்கினான்.

கருமுகில் கூட்டங்கள் வானத்தை கௌவ்வி இருக்க.. அந்தக் கடும் குளிரிலும் கம்பீரமாய் நிமிர்ந்து நின்று தன் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பாரிஸ் கோபுரத்தை கண்டதும்.. உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றென நண்பன் சிவா கூறியது இவன் ஞாபகத்திற்கு வர.. தாய் நாட்டில் கோடை காலத்து வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கருகி விழும் சருகுகளால் களையிழந்து காணப்படும் நிழல் தரும் மரங்களைப்போல்.. இங்கு குளிரின் கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல்.. தாயகக் கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதிகளாய் இருந்து அவதிப்படும் தன்னைப்போன்றவர்களைப் போல் தனிமரமாய் நின்று தவிக்கும் நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கே தெரிந்து கொண்டிருந்தன.

இந்த இனிய மாலைப்பொழுதின் அரவணைப்போடு.. இன்னும் சில நொடிப் பொழுதில் பூமித்தாய் மெதுவாக உறங்கிக்கொள்ளப் போகிறாள் என்பதை அங்கு கண் சிமிட்டும் மின் விளக்குகளும் உணர்த்தி நிற்க…! ஆறு முறை அடித்து ஓய்ந்த அந்த சுவர்க்கடிகாரம் இவனது கற்பனைக் குதிரைக்கு கடிவாளமிட்டு நிறுத்தி தங்கையிடம் இருந்து வந்த கடிதம் இவன் பதிலுக்காய் காத்திருப்பதை நினைவு படுத்தியதும் அவனது கண்கள் குளமாயின. இரு விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர்த்துளிகள் வேதனையின் விம்பங்களாய் காதோரமாய் வழிந்து சவரம் செய்யப்படாத கன்னத்தை ஈரமாக்கிக்கொண்டிருக்க.. அந்த கசங்கிய கைக்குட்டையால் மீண்டும் கண்களை ஒற்றிக்கொண்டு தன்னை சுதாகரித்துக்கொள்ள முற்படுகையில் சிவா வேலை முடிந்து வீடு திரும்பவும் சரியாக இருந்தது.

வேலைக் களைப்புடன் வீடு திரும்பியவன் நண்பனது கோலம் கண்டு தவித்துப்போய் வாஞ்சையுடன் வினவினான்.

‘ஒன்றுமில்லை சிவா” என்று கூறி ஆனத் சமாளிக்க முற்பட குறுக்கிட்ட சிவா..

‘இஞ்சை பார் ஆனந்.. நான் உன்னோட எத்தனை வருடமாய் பளகிறன்….? உன்னுடைய உள்ளத்து வேதனைகளில் நானும் பங்கெடுத்துக்கொள்ளுவது தவறா” …? எனக் கேட்க..

தனது மனக்குமுறல்கள் உயிரினும் மேலான தம் நட்பிற்கு இடைஞ்சலாக இருந்துவிடக்கூடாது என்றெண்ணிய ஆனந்.. உமிழ்நீரை மென்று விழுங்கிவிட்டு..

‘அக்காவுக்கு திருமணம் முற்றாகியிட்டுதாம். பணம் அனுப்பி வைக்கும்படி தங்கச்சி கடிதம் போட்டிருக்கிறாள். அவலங்கள் நிறைந்த என் வெளிநாட்டு வாழ்வின் இயலாமை அக்காவின் வாழ்விலும் அழியாத கோலத்தை ஏற்படுத்தி விடுமோ…? என்று நினைத்து கவலைப் படுகிறேன்.

அக்காவுக்கு செவ்வாய்க் குற்றம் இருந்ததனால் தேடி வந்த வரன்களெல்லாம் பொருந்தாமல் போக.. திருமணத்திற்கு என சேர்த்து வைத்திருந்த பணத்தை ஏயென்சிக்கு கட்டித்தான் நான் இங்கு வந்தனான். எப்படியும் ஒருவருடத்துக்குள் உழைச்சுப் போடலாம்தானே என்ற நப்பாசையில். ஆனால் இங்கு வந்த பின்புதான் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடிகிறது. வெளிநாடு சென்று உழைக்க வேண்டும். என்ற ஆசை என் உள்ளத்தில் ஏற்பட்டபோது அப்பா சொன்னார்:

வெளிநாடு எமக்கு வேண்டாம். சொந்த நாட்டில் சொந்தங்களோடு இருந்து சந்சோதமாக வாழ்வதைப் போன்ற சுகங்களுக்கு ஈடாக எந்த நாட்டிலுமே கிடைக்காது என்று. அவர் கூறியவை அர்த்தம் உள்ளவையாக இருந்தாலும்.. அப்பாவின் ஊதியத்தில் என் கண்மணிகளான அக்காவையும்.. தங்கையையும் சமுதாயத்தில் சந்து பொந்தெங்கும் புரையோடிக் கிடக்கின்ற வரதட்சணை எனும் கொடிய அரக்கனின் பிடியிலிருந்து காப்பாற்றி.. அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை தேடிக்கொடுக்க முடியாது என்ற காரணத்தால்தான் வெளிநாட்டு மோகம் என்னுள் துளிர்விட்டது.

இங்கு வந்து ஒருவருடம் உருண்டோடி விட்டபோதிலும்.. என் அகதி விண்ணப்பம் கூட இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் அக்காவின் வாழ்வும் கேள்விக்குறியாகி விடுமோ… என்றெண்ணுகையில் என் நெஞ்சு வேதனைத்தீயினால் வெந்து பொசுங்குகிறது.” எனக் கூறி கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரை தன் வலது கரத்தினால் வருடிக்கொள்ள நெஞ்சமெனும் கங்கையில் நீர் வற்றிப்போனதனாலோ என்னவோ…? தற்போது அவனது கண்களில் இருந்து கண்ணீர் சுரப்பது நின்றுபோக கண் விழிகள் வெந்து போனதுபோல் சிவந்து காணப்பட்டன.

நண்பனது உள்ளம் துன்பச் சுமையால் துவண்டுபோய் இருப்பதை உணர்ந்துகொண்டு ‘ஆறு கடந்தாச்சுதாம் குளம் கடக்கிறது பெரிய வேலையே…?” எதையும் சமாளிக்கலாம் என்ற நெஞ்சுறுதியுடன் இருந்தால் நெருங்கிவரும் துன்பங்களெல்லாம் எம்மை விட்டு விலகிவிடும்.

வெளிநாடுகளில் வாழுகின்ற ஒவ்வொருவரது வாழ்விலும் ஒவ்வொரு சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. தாய்நாட்டு மண்வாசனையை நுகரமுடியாமை.. பெற்றவர்களதும் உடன் பிறந்தவர்களதும் பாசங்களை பகிர்ந்துகொள்ள முடியாமை… நட்சத்திரங்களின் காவலுடன் வான்மதியின் வெளிச்சத்தில் மனம் திறந்து பேசி மகிழ்ந்து தம் எண்ணங்களை பரிமாறிக்கொண்ட அந்த இனிய இளம் காதலர்களின் பிரிவுத்துயர் இத்தனைக்கும் காரணம் இந்த புகலிட வாழ்வின் திருப்பு முனைகள்தான்.

இத்தகைய சோகங்கள் நெஞ்சுள் நிறைந்திருப்பதனால். இதயத்தடாகத்தில் மல்லிகை பூத்துக்குலுங்கினாலும் நறுமணம் தருவதில்லை! என ஆதங்கத்துடன் கூறினான் சிவா.

பின்பு இருவரும் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தனர். ‘றெஸ்ரோறோண்டு” அடுப்பு வெக்கையில் நின்று வேலை செய்த களைப்பிலோ என்னவோ… சிவா சில நிமிடங்களில் உறங்கிவிட்டான்.

ஆனந்தின்; கண்கள் மட்டும் மூடியிருந்தன. உறக்கம் அவனை இன்னும் தழுவிக்கொள்ளவில்லை. கிட்டி புள்ளு விளையாடி கிளித்தட்டு மறித்து மகிழ்ந்த அந்த நாட்களையும்.. அகதிப் பணத்தோடு சிறியதொரு ‘றுமில்” நண்பன் சிவாவுடன் நகர்ந்து செல்லும் நாட்களும் இவன் மனதினுள் வேப்பங்காய்போல் கசந்தது.

தாயகத்தில் பொருளாதாரத்தடை இருந்த வேளையிலும்.. அரைவயிற்றுக் கஞ்சி குடித்தபோது இருந்த சந்தோசம் இங்கு அவனுக்கு கிடைக்கவில்லை! இவன் மட்டுமா…? இவனைப்போன்று எத்தனை பேர் புகலிட நாடுகளில் அகதிச் சக்கரத்துக்குள் நசிந்து நலிந்துபோய் இருக்கிறார்கள்.

இது மட்டுமா… இவன் வாழ்வில்…? இவனை உயிருக்கு உயிராக நேசித்து.. இதயத்தில் குடியிருக்க இடம் கேட்டவள் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் என் கழுத்து உங்கள் மாங்கல்யத்துக்காய் காத்திருக்கும் என அறுதியட்டுக் கூறி அழுது புலம்பியவள் இன்று இன்னொருவனுக்கு மாலையிடப்போகிறாள் என்ற செய்தியையும் தங்கை வரைந்த கடிதத்தில் அழுத்தமாய் குறிப்பிட்டிருந்தது இவன் தலையில் இடி விழுந்ததைப் போலல்லவா இருந்தது.

நெஞ்சறையுள் நிழலாடிய நினைவுகள் இறுதியில் அவள் பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பாள் என சமாதானம் சொல்ல.. நித்திராதேவியின் அரவணைப்போடு ஆனந்தும் உறங்கிவிட்டான்.

மறுநாள் பொழுது பூவென மலர்ந்தது.
சிவா சொன்னான்: ‘அக்காவைப்பற்றிக் கவலைப் படாதையும் அவாவின்ர திருமணத்திற்கு நான் பணம் தாறன். உமக்கு வசதி வரும்போது திருப்பித்தாரும.”
அதற்கு ஆனந்: ‘ என் மாசற்ற இதயத்தை நேசித்ததனால் இத்தனை வருடங்களாக இடர்கள் பல வந்தபோதும் உனக்காக காத்திருந்த அம்மங்கை இன்னும் சில மாதங்களில் உனக்கு மனைவியாகப்போகும் செய்தி கேட்டு என் மனம் புளங்காகிதமடையும் இவ்வேளையில்.. வசதியற்ற அக்குடும்பத்தில் பிறந்த பெண்ணை வாழ வைக்க வேண்டும் என்பதற்காய் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்திருந்த பணத்தை என் அக்காவின் நல்வாழ்வுக்காகத் தருவதாக சொல்லுகிறாயே.. உன் பெருந்தன்மையை நான் பாராட்டுகிறேன். ஆனால்.. இவ்வுதவியைப் பெற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது” என்றான்.

வறுமைக் கோட்டிற்குள் இருந்த அவனது பெற்றோரை நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டு வந்த பின்பு திருமணம் ஆகாமல் இருந்த தன் இரு சகோதரிகளையும் கரைசேர்ப்பதற்கு அவன் அனுபவித்த கஸ்டங்கள் இவனுக்கல்லவா தெரியும்.

அது மட்டுமா…? சிவாவின் பெரியக்கா குடும்பம் வெளிநாட்டிற்கு வந்து பணம் சம்பாதித்ததுதான் மிச்சம்! இன்று பிள்ளைகளை ஐரோப்பிய கலாச்சார சீரழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் தடுமாறுவதும்… மூத்தவள் ஊர் பேர் தெரியாத ஒருவனோடு சுற்றித் திரிவதும்… இளையவள் ‘இன்ரர்நெட்” டிற்கு அடிமையாகி தன் பள்ளித்தோளிகளுடன் தினம் உலவுவதும்… இத்தகைய நிகழ்வுகளிலிருந்து பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றவர்களை தடுத்துவிடும் ஐரோப்பிய நாட்டுச் சட்டங்கள்.

இவ்வாறான மன உளைச்சல்களிலிருந்து… சிவா மீள வேண்டுமானால் இவனுக்கொரு வாழ்வு நிச்சயம் தேவை. இதையே இவனது பெற்றோரும் எதிர்பார்த்தனர்.

வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகின்ற வசந்தமான நினைவுகள்.. நெஞ்சகத்திற்குள் குமைந்து கொண்டிருக்கும் வேதனைகளை விரட்டி விடும் என்ற நம்பிக்கையும் ஆனந்திற்கு இருந்தது.

அதற்கு சிவா: என்னைப்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே இத்தனை வருடங்களாய் எனக்காக காத்திருந்த என் அமுதவேணி இன்னுமொரு ஆண்டு காத்திருப்பாள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. உன் அக்காவுக்கு செவ்வாய் குற்றம் இருக்கின்ற படியால் பொருந்தியுள்ள இந்த வரன் நிச்சயமாய் அமையவேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனையும்கூட. ஆகையினால் நான் செய்யும் இச் சிறு உதவியை மறுத்து நம் நட்பை மாசுபடுத்திவிடாதே என்றான் சிவா.

நண்பனது வார்த்தைகளை மறுக்க முடியாத ஆனந் வெளிநாடு வந்ததும் சொந்த பந்தங்களையே மறந்து விடும் பலரைப் பார்த்திருக்கிறேன். தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழும் ஓர் நண்பன் எனக்குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்தான்” எனக்கூறி அவ்வுதவியைப் பெற்றுக்கொள்ளவும் தமக்கையின் திருமணக்கோலம் தாயகக் கனவுகளாய் நெஞ்சத்திரையில் நிழலாடிக்கொண்டிருந்தது.

…சிவனேஸ்…

மறுமொழியொன்றை வழங்குக