பொழுது புலர்ந்ததும் புலவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார் வாஞ்சிநாதர். அந்த ராமு நாய்க்குட்டியும் தன்னையும் கூட்டிச் செல்லும்படி துள்ளிக்குதித்து அடம்பிடித்துக்கொண்டிருந்தது.
தேநீர்க்கோப்பையுடன் அங்கு வந்த மகள் பவித்ரா தகப்பனிடம் அதை நீட்டிவிட்டு ராமுவை பிடித்து சங்கிலியால் பிணைக்க முற்பட அது திமிறி தன் ஆட்சேபணையை தெரிவிக்க.. அதைக் கண்ட தகப்பன் ” அதை விடு பிள்ளை வாயில்லாப் பிராணி” என்று கூறி முடிக்க.. பஞ்சவர்ணம் கிணற்றடிப் படலையை திறந்துகொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவாவைக் கண்டதும்.. “ இவாவுக்கு வேற வேலையில்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்துகொண்டாள் பவித்ரா.
மகளது மனதினுள் திடீரென ஏற்பட்ட மாறுதல்களை கண்ணுற்ற தாய்
மரகதம்மா.. “ஆரு பிள்ளை வந்தது” எனக் கேட்க..
சிறிது நேர மௌனத்தின் பின் “பஞ்சவர்ணம் மாமி” எனக் கூறிவிட்டு..
“இவயளின்ர உறவே வேணாமெண்டுதானே ஒதுங்கி இருந்தனாங்கள்” என்று தொடரவே…
“மெதுவாய் கதை பிள்ளை அவாவின்ர காதிலை விழுந்திடப்போகுது” என்று தாய் சமாதானப் படுத்த…
“நாங்கள் பயந்து பயந்து வேணாமெண்டு ஒதுங்கி வாழ்ந்ததனால்தான் சிலர் தங்கள் தேவைகளுக்கு மட்டும் எங்களை பயன்படுத்த நினைக்கினம்” என்று கூறி ஆதங்கப் பட்டுக்கொண்டாள் பவித்ரா.
அவ்வேளையில் தகப்பன் வாஞ்சிநாதர் “பசுக்களில பாலை கறந்து பால்க்காரப் பையனிடம் கொடுத்துவிட்டு.. அதுகளை அவிழ்த்து வைரவர் கோயில் வளவில கட்டிவிடு பிள்ளை” என குரல் கொடுத்து விட்டு புலவுக்கு கிளம்பிவிட்டார் ராமுவும் அவருக்குப்பின்னால் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடியது.
தமையனுடன் கதைத்துக்கொண்டிருந்த பஞ்சவர்ணம் அவர் போனபின்பு..
“என்ன அண்ணி செய்யிறயள்” என வினாத்தொடுத்தபடி அடுக்களைக்குள் நுழைய..
“வா… பஞ்சவர்ணம்” எனக் கூறி வரவேற்று பக்கத்தில் கிடந்த தடுக்கை எடுத்துப்போட்டு அமரும்படி சொல்ல.. அதை மீண்டும் எடுத்து தட்டி உதறிவிட்டு அமர்ந்துகொண்டார்.
அப்போது தயாராகிக்கொண்டிருந்த தேநீரை தாய்க்கும் மாமிக்கும் பரிமாறிவிட்டு.. அந்த தொழுவத்திற்குள் நுழைந்து கொள்கிறாள் பவித்ரா.
ஆனால் அவளது உள்ளம் மட்டும் வேதனையில் வெந்துகொண்டிருந்தது.
அழகும் அறிவும் படிப்பும் பண்பும் மிகுந்த அவளிடத்தில் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட காரணமாய் இருந்த கதைதான் என்ன…?
பாசமாய் இருந்த இந்த குடும்பங்களிடையே மனக்கசப்பு எனும் புயல் எப்படி வந்து வீசியது…?
வாஞ்சிநாதரின் வாழ்க்கை வறுமையோடுதான் ஆரம்பமானது. பெற்றவர்களது வாழ்க்கைப்பயணம் முடிந்து போனபோதும் கூட மனதை தளரவிடாமல் தன் ஒரேயொரு தங்கை வதனியின் நல்வாழ்வுக்காக பல அர்ப்பணிப்புக்களுடன் வாழ்ந்தவர்.
சகோதரனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றால்போல் நடந்து கொண்ட பாசமிகு தங்கையை கல்லூரிக் காதல் திசைமாற்றியது.
இது கண்டு மனமுடைந்து போனாலும்.. தங்கையின் மனது புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவள் வரும்பியவனையே வாழ்கைத்துணையாக்கவும் சம்மதித்து.. தங்கள் குடும்பம் எனும் குருவிக்கூட்டில் வாழும் உறவுகள் கலைந்து போகாது ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டார். ஆனால் வதனியை கரம் பற்றியவர் பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்ததனால் இவரது ஆசைகள் நிறைவேறாது போயின.
பணமே தன் வீட்டில்தான் விளைகிறது என்ற நினைப்புடன் காலங்களை கழித்துக்கொண்டிருப்பவர் வதனியின் புதிய மாமனார் கோதண்டம். இத்தகைய மனமுள்ள இப்பெரியவரது வீட்டில் ஏழையன் பாதச்சுவடுகள் பட்டாலே அவரது இதயத்தில் இடி விழுந்ததைப்போல் இருக்கும். இத்தகையவரிடம் மனித நேயத்தை மருந்துக்கும் எதிர் பார்க்க முடியுமா…? அது மட்டுமல்ல அன்றொருநாள் வாஞ்சிநாதரைப் பார்த்து: “நாங்கள் கோபுரத்தில் இருந்து உங்களைப் போன்ற ஏழைகளைப் பார்த்து மனதுக்குள் மகிழ்ந்து பொழுது போக்குபவர்கள். ஏதோ துரதிர்ஸ்டம் என் மகன் உன் தங்மையுடன் சேர்த்து வாழ ஆசைப்பட்டதனால் ஏற்றுக்கொண்டேன்”. ஆனால்.. உனக்கும் உன் தங்கைக்கும் உள்ள உறவு.. உறவாகவே இருக்கட்டும்…! எங்களுடன் ஒட்டி வாழலாமென்று மட்டும் மனப்பால் குடிக்கவேண்டாம்.” என கோதண்டம் கூறிய வார்த்தைகளால் வாஞ்சிநாதரின் இதயத்தில் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் ஆறாமலிருக்கிறது.
எனினும்.. இதைக் கேட்டுக்கொண்டு நின்ற தங்கை வதனியின் உள்ளத்திலே எழுந்த வேதனையின் விம்பங்கள்.. விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர்த்துளிகள்.. கன்னத்தில் காற்றுக்கு அசைந்தாடிய அவளது கருங்கேசத்தை ஈரமாக்கி வழிந்தோடியதை பார்த்தபோது அக்கணப்பொழுதில் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்ததும் உண்மைதான். ஆயினும் தங்கையை அணைத்து ஆறுதல் கூறமுடியாமல்.. மௌனத்தில் மட்டும் மனம் அழுது.. எந்த ஒரு சகோதரனுக்கும் இத்தகையதொரு நிலை வரக்கூடாது என்று இறைவனிடமும் பிரார்த்திதுக்கொண்டது.
அன்றோடு தென்னிலங்கையில் உள்ள தன் கணவரது இல்லத்திற்கு புது வாழ்வை ஆரம்பிக்க புறப்பட்டுச்சென்றவள்தான். இன்றுவரைக்கும் வாஞ்சிநாதர் சகோதரியை பார்த்ததில்லை. தாயை இழந்த சேய்போல் தவிப்புகள் ஏற்படும் போதெல்லாம்.. அந்த முழு நிலவின் முகத்தை நிழற்படத்தில் பார்த்துத்தான் ஆறுதலடைந்து கொள்வார்.
இது தந்தை.. மகள் பவித்ராவுக்கு சொன்ன கதை. அவளும் தன் அத்தையை நேரில் பாத்ததில்லை நிழற் படத்தில் மட்டும்தான்.
இத்தகைய வேதனைகளால் மனம் வெந்து போயிருந்த வேளையில் ஒன்றுவிட்ட சகோதரியான பஞ்சவர்ணம் மீதுதான் வாஞ்சிநாதருக்கு பாசமும்.. பற்றுதலும் அதிகமாயிருந்தது.
பஞ்சவர்ணத்தின் கணவர் அயலூர்க்காரராய் இருந்தபோதிலும்..அரசாங்கத்தில் முமாஸ்தாவாக பணிபுரிந்தார். இதனால் ஓரளவு வசதியாகவும் வாழ்ந்தார்கள். இவர்களுக்கும் ஒரேயொரு மகன் “சச்சின்” படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன். பொதுநல தொண்டுகளிலும் நல்ல ஈடுபாடும்கொண்டு.. ஒரு சுறுசுறுப்புள்ள இளைஞனாகவும் திகழ்ந்தான்.
சச்சினும் பவித்ராவும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்ததனால்.. இருவரும் பேசிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. இதை தமக்கு சாதகமாகப் பயன் படுத்தி ஊர்ச்சனங்கள் இருவருக்கும் முடிச்சுப்போட்டு கதைக்க ஆரம்பித்தன. ஆயினும் பஞ்சவர்ணமும் கணவரும் இதை கண்டும் காணாததுமாய் நடந்து கொண்டனர்.
ஆண் கெட்டால் சம்பவம். எனக்கூறும் சமுதாயம் பெண் கெட்டால் சரித்திரம் என்றல்லவா சொல்கிறது…!
இதைக் கேள்விப்பட்டதும் வாஞ்சிநாதரதும் மனைவியினதும் உள்ளங்களிலே ஏற்பட்ட நினைவுகள் நெருடல்களை ஏற்படுத்த.. ஒரு நாள் தாய்: பவித்ராவிடம் இது பற்றி வினவ.. அவள் தங்களுக்குள் அப்படி ஒரு உறவு இல்லை என்று அடியோடு மறுத்துவிட்டாள். ஆனால் உண்மையும் இதுவாகத்தான் இருந்தது.
ஆண்டுகளும் சில நகர்ந்து செல்ல.. பஞ்சவர்ணத்தின் உள்ளத்தில் புதைந்து கிடந்த எண்ணங்கள் புதிய உறவொன்றுக்கு அத்திபாரமிட ஆசைப்பட்டதனால்.. அதை தன் கணவரோடும் கலந்தாலோசித்த பின்பு.. சச்சினை பிரான்ஸ்சுக்கு அனுப்பி வைப்பதென முடிவெடுத்தனர். அங்குதான் பஞ்சவர்ணத்தின் தமையனது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர்.
இந்த வேளையில்தான் வாஞ்சிநாதரது மனதுக்குள் தோன்றிய சில வினாக்கள் விடை காணாது தவிக்க… சச்சினையும் பவித்ராவையும் ஊர்ச்சனங்கள் சந்தேகக் கண்களுடன் பார்ப்பதால்.. இவர்களது எதிர்கால வாழ்விலும் சில பின்னடைவுகள் ஏற்படலாமென எண்ணி சொந்தங்கள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு மனைவி மரகதம்மாளிடமும் கருத்துக்களை கேட்டறிந்த பின்பு.. ஒரு நல்ல நாளாய் பார்த்து பவித்ராவுக்கு சச்சினை வரன் கேட்டு சென்றனர்.
இவர்களை முகமன் கூறி வரவேற்ற பஞ்சவர்ணமும் கணவரும் உபசரித்து மகிழ்ந்திருக்க.. தாங்கள் வந்த காரணத்தை அவர்களிடம் கூறி சம்பாசித்து.. பின் விடைபெறும் வேளையில் பஞ்சவர்ணம் சொன்னார்:
“எங்களுக்கு இருப்பதும் ஒரேயொரு பிள்ளை அவனை எனது அண்ணனின் மகள் அட்சயாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையாகும். இதனால்தான் சச்சினை பிரான்ஸ்சிற்கு அனுப்பி வைக்கவும் முடிவடுத்தோம்” என்றார்.
பஞ்சவர்ணத்தின் கணவரோ மனைவி கூறுவது சரியென மனதுக்குள் ஆமோதிப்பவர்போல் மௌனமாக சிரித்துக்கொண்டிருக்க.. வாஞ்சிநாதரும் மனைவியும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.
ஆயினும் ஊர்சனங்கள் கதைப்பதைப் பற்றிக்கூட பொருட்படுத்தாத தங்கையை நினைக்கும்போது….. அந்த மனங்கள் புண்பட்டு அழுதுகொண்டன.
ஆனாலும்.. காலச் சக்கரத்துக்குள் பஞ்சவர்ணத்தின் ஆசைகள் நிறைவேறாது போயின.
“அட்சயா” வெளிநாட்டில் வாழ்ந்ததனால் .. தமிழர் கலாச்சாரம் என்றால் என்னவென்றும் தெரியாமல் வளர்க்கப்பட்டிருந்தாள்.
பிந்தமண்ணின் பெருமையினையும்.. எமது கலாச்சாரங்களையும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கத் தவறிய பெற்றோர்களால்தான் பிள்ளைகள் எமக்கு ஒவ்வாத கலாச்சாரங்களுக்கு அடிமையாகி தப்பான பாதைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பெற்றோர்கள் விழிப்புடன் இருந்தால் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து பிள்ளைகளும் விடுபட்டு எமது கலாச்சாரங்களை காப்பாற்றும் ஒரு நல்ல சந்ததியினராய் வாழவும் வாயப்;புண்டல்லவா…?.
“அட்சயா” தனக்குப்பிடித்த இலங்கையர் அல்லாத ஒருவருடன் உறவை வளர்திருந்தாள். அத்தோடு இதை சச்சினிடமும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் கூறியும் இருந்தாள்.
இது பஞ்சவர்ணத்துக்கு தெரியவரவே ஒரு நாள் தமையனோடும் தொடர்புகொண்டு கதைத்தபோது.. உண்மை உறுதியாகியது. மகனுக்கும் வயது ஏறிக்கொண்டே போவதனால் என்ன செய்வதென்று தெரியாமல் காலம் தாழ்த்தாது. பவித்ராவின் பக்கம் இவரது பார்வை திரும்பியது.
இவை அனைத்தையும் அறிந்த வாஞ்சினாதரதும் மனைவியினதும் எண்ணங்கள் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்ற தன்னம்பிக்கை இருந்ததே தவிர.. சச்சினை தன் வீட்டு மருமகனாக்கவேண்டும் என்ற ஆசை அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு இம்மியளவும் இருந்ததே இல்லை.
ஆனால் பஞ்சவர்ணமோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வருவதும் போவதுமாக இருந்தார். அவர் தன் மகனைப்பற்றி கதைக்கும் போதெல்லாம் செல்லாத கதைகளுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கி என்ன பயன் என்பதைப்போல வாஞ்சிநாதரும் நடந்து கொள்வார்.
இப்படியாக இருக்கும்போது பஞ்சவர்ணம் ஒருநாள் கேட்டார் “அண்ணன் பழசுகளை ஒன்றும் மனதில் வைச்சுக்கொள்ளாதையுங்கோ சச்சினை பவித்ராவுக்கு கட்டி வைத்தால் என்ன” என்று.
“அப்படி நினைத்துத்தான் நானும் அண்டைக்கு கேட்டனான் நீ விரும்பவில்லை. ஆனா இப்ப நாங்கள் பிள்ளைய வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பவில்லை. அவளுக்கு என்ன வயது இருக்குத்தானே”.. என்று சொல்ல
நீங்கள் பழசுகளை மனதில் வைத்துக் கொண்டுதான் கதைக்கிறயள் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாலும் பஞ்சவர்ணம் விடுவதாக இல்லை.
மற்றுமொரு நாள் பவித்ராவை சந்தித்து கதையை தொடக்க.. அதற்கு அவள் அப்பா சொன்னது போல எனக்கும் பிறந்த மண்ணிலேயே இருந்து வாழவேண்டுமென்பதுதான் ஆசை. இங்கு இருக்கும் சொந்தங்களும் சுகங்களும் எந்த நாட்டிற்கு போனாலும் கிடைக்குமா….? என்றாள்.
“எப்படித்தான் உழைச்சாலும் முன்னுக்கு வர முடியாத நாட்டில இருந்து வாழவிரும்பிறயே பிள்ளை…? ஏதோ அண்ணணின் பிள்ளை நல்லாயிருக்க வேணுமெண்டுதான் கேட்கிறன் என்றார் பஞ்சவர்ணம்.
இதைக் கேட்டதும் பவித்ராவின் நெஞ்சுக்குள் நெருஞ்சிமுள் குத்தியது போன்றிருந்தது. இருந்தாலும் தன்னை சுதாகரித்துக்கொண்டு: “ஏன் மாமி முடியாது தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால் ஏன் இங்கிருந்து வாழமுடியாது….? முடியும் என்று நினைத்தால் எல்லாமே முடியும். அது மட்டுமல்ல நான் பிறந்த இக்கிராமத்திலேயே மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன் அதுபோலவே இங்கு ஆசிரியையாக பணியாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னாலியன்றவரை உழைத்து.. நல்லதொரு சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று கூறி முடிக்க.. பஞ்சவர்ணம் மறு பேச்சின்றி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
இப்படியாக மாதங்கள் வருடங்களை பிரசவித்துக்கொண்டிருக்க.. அன்று அந்தக் குக்கிராமமும் அதிகாலைப் பொழுதின் அரவணைப்பில் ரம்மியமாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. அப்போது ராமு அட்டகாசமாய் குரைப்பது கேட்டு வீட்டிற்குள் இருந்து எட்டிப்பார்த்தாள் பவித்ரா. அங்கே வதனியும் கணவரும் மகன் சந்துருவும் வந்துகொண்டிருந்தார்கள் பவித்ராவை பெண் கேட்பதற்கு.
…சிவனேஸ்…