பொழுது மலர்ந்ததும் ஆதவனின் வருகை கண்டு அந்தக்கிராமம் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வீடுமட்டும் சோபை இழந்து காணப்பட்டது.
சித்தப்பிரமை பிடித்தவளைப்போல் அங்கும் இங்குமாய் அலைந்துகொண்டிருந்தாள் மேகவல்லி ;
தெருவால் போவோர் வருவோரிடமெல்லாம் அதைப்பற்றி விசாரிக்கிறாள். அவர்கள்
கூறும் பதில்களில் திருப்தி காணாது நெஞ்சம் கனத்து நிற்க.
அந்தப் பிஞ்சு உள்ளமும் அப்பாவைத்தேடி அழுதுகொண்டிருந்தது.
அந்தக் காலத்தில் ஆரோக்கியநாதர் குடும்பம் என்றால் அங்கு தெரியாதவர்கள் யாரும்
இல்லை. அந்த அளவிற்கு அவர் பழகும் விதமும் பண்பும் அக்கிராமத்தவர்கள்
மத்தியில் அவருக்கு என்றொரு தனி இடத்தை அமைத்துக்கொடுத்திருந்தது
மக்கள் மனங்களில் இவர் மகுடமாய் இருந்தாலும் அவரது வாழ்க்கை என்ற
நீரோட்டத்தில் மேகவல்லி இணைந்து கொண்ட பின்புதான் இத்தகைய பெயரும் புகழும்
அவரைத்தேடி வந்தது என்று சொல்லலாம்.
மேகவல்லி மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பெற்றோரின் அரவணைப்பில்
மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் காதல் திருமணத்தின் மூலம் தன்
வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுத்த குற்றத்திற்காய் பெற்றவர்களாலும் உடன்
பிறந்தவர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.
ஆனாலும் ஊரறியாமல் உறவறியாமல் உள்ளத்திலே ஏற்பட்ட காதலுக்கு
மதிப்பளித்து தன்னை நம்பி வந்தவளை கரம்பற்றி மனம் நோகாது வாழ்ந்து
வந்தவர் ஆரோக்கியநாதர்.
சுயதொழில் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தைக்கொண்டு வாழ்ந்தாலும் ஒருவரை
ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டிருந்ததனால் வாழ்க்கை என்ற ஓடமும்
மகிழ்ச்சியாகவே நகர்ந்துகொண்டிருந்நது.
இருப்பினும் திருமணமாகி இனிய எதிர்பார்ப்புகளுடன் ஆண்டுகள் சில உருண்டோடியும்
ஒரு குழந்தைச் செல்வம் இல்லாதது இவர்களது உள்ளங்களிலிலும் சி ல கீறல்களை
ஏற்படுத்தத்தொடங்கின.
மேகவல்லியும் திரியாத கோயில்களும் இல்லை. வேண்டாத தெய்வங்களும் இல்லை.
அந்த அலைகடல் மத்தியில் அமைந்திருந்து அருள் பாலித்து வரும் அன்னை
நாகம்மை மீது வைத்திருந்த பற்றுதலால் அவள் மீதும் பழியைப் போட்டாள்.
அவளது பிரார்த்தனையின் பயனாக திவ்யா என்ற மழலை மேகவல்லியின்
மடிமீது தவழ்ந்தது.
பின்பு சொல்லவும் வேண்டுமா……………..? குடும்பத்தில் சந்தோசம் கரைபுரண்டோடியது.
இந்தச் சந்தர்ப்பத்தில்கூட அவளது உறவினர்கள் திரும்பியும் பார்க்கவில்லை.
அப்படி அவள் செய்த கொடுமைதான் என்ன………….?
தான் விரும்பியவரைத் திருமணம் செய்தது குற்றமா……………..?
பெரியோர்கள் முன்னிலையில் நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து நிச்சயிக்கப்படுகின்ற
திருமணங்களில் கைக்கூலி கேட்ட பின்புதானே மங்கையின் கழுத்தில் மூன்று முடிச்சுப்
போடப்படுகின்றது.
எங்கோ பிறந்து வளர்ந்த இரு உள்ளங்கள் சந்தித்துப் பழகி எண்ணங்களைப்
பரிமாறிக்கொண்ட பின்பு எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி ஏற்படுகின்ற புனிதமான
அன்பு இறுதிவரை நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில்தானே மணவாழ்கையில்
இணைந்து கொள்கின்றன. இது தவறா…………………?
மேகவல்லியின் நெஞ்சத்திரையிலே நிழலாடிய நினைவுகள் மனித மனங்களின்
பலவீனங்கனைத் தெளிவுபடுத்தி நிற்க……….
இன்பமும் துன்பமும் கலந்ததுதானே மனித வாழ்க்கை.
இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் அதேவேளையில் துன்பத்தைக் கண்டு
துவண்டு போகது இருந்தால் வாழ்க்கை என்ற படகு திசைமாறாது செல்லும்
என்று கூறி உள்மனது அவளை சமாதானம் செய்துகொண்டிருக்க.
காலம் மாதங்கள் வருடங்களை பிரசவித்துக்கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அந்த விபரீதம் அவள் வாழ்வினில் நிகழ்ந்தது.
பெற்றவர்களைப் பிரிந்து சென்று தனக்குப் பிடித்தவருடன் தனிக்கூடு அமைத்து
உண்டு மகிழ்ந்து குடும்ப சுகத்தை அனுபவித்து வந்த அந்தப் பறவை காட்டாற்று
வெள்ளத்தினால் தன்னை தாங்கி நின்ற மரம் சரிந்து விடுமென இம்மியளவும்
எதிர்பார்த்திருக்கவில்லை.
அன்று அதிகாலை தனது அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்காக புலவுக்குப்
புறப்பட்டுச் சென்ற ஆரோக்கியநாதர் அந்தி மயங்கும் வேளையாகியும் வீடுதிரும்பாதது கண்டு அவள் மனம் பீதியுற்றது.
அவளும் தேடாத இடங்களில்லை. அப்போது அங்கு போர் மேகங்களும்
காணப்பட்டதனால்………..
ஐயோ நான் யாருமற்ற அனாதை ஐயா என்னை ஏன்…………………
சோதிக்கிறாய்…………?
என்று ஆண்டவனை நொந்து தன் இரு கைகளையும் தலையில் அடித்து
அலறினாள். துடித்தாள். துவண்டாள்.
அவள் ஆத்திரமடைந்து ஆழுததில் அர்த்தம் இருந்தது. சந்தேகப் பட்டதில் நியாயம்
இருந்தது.
இவள் மட்டுமா…………? இவளைப்போன்று இன்னும் எத்தனை பெண்கள் அங்கு
கண்ணீரும் கம்பலையுமாய்………………….வாழ்கிறார்கள்.
நகர்ந்துகொண்டிருந்த நாட்களில் சேர்த்து வைத்திருந்த செல்வங்களும் மெதுவாகக் கரைந்து செல்ல ………. ஆரோக்கியம் அற்று நிற்கும் இவளது குடும்ப நிலையைக் கண்ட அயலவர்களும் மெதுவாக விலக ஆரம்பித்தனர்.
ஏதிலிகளாய் இருக்கும் இவளுக்கும் மகள் திவ்யாவுக்கும் அன்புக்கரம் நீட்டி ஆதரவளிக்க இன்று யாரும் இல்லை.
அந்தத் தையல் இயந்திரத்துடன் இரவு பகலாக போராடினால்தான் ஒருவேளை
என்றாலும் உணவு உண்டு அவர்களது வயிறுகள் குளிரும் என்ற நிலை தொடர்ந்து செல்கிறது.
இதுதான் மேகவல்லியின் வாழ்க்கையில் நடந்து முடிந்த கண்ணீர்க்கதை.
இச்சந்தர்ப்பத்தில்கூட அவளை எட்டி இடக்கண்ணால் பார்க்காத தந்தையினதும் சகோதரனினதும் மன வலிமைகள் மாற்றம் காணாது இருக்க………………….
மேகவல்லியின் தாயுள்ளம் மட்டும் அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருந்நது.
பிள்ளைகளின் எதிர்காலங்கள் நல்லதாய் அமையவேண்டும் என்பதற்காக தங்களையே ஈகம்
செய்து வாழுகின்ற பெற்றோர்களுக்கு மேகவல்லியைப் போன்றவர்கள் எடுக்கின்ற முடிவுகளால் அவர்களது நல்ல உள்ளங்களும் ஆணாதிக்கத்தின் கோரத்தால் ஊனமாகிப் போவது உண்மைதான்.
ஆனால் இதையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க நினைப்பதும் நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டல்ல……..!
இதனால்தான் தாயன்புக்கு நிகர் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத்துடித்தது…. அந்தத் தாயுள்ளம்.
தன் மகளை அரவணைத்துவாழ ஆசைப்பட்டன…… அவளது கரங்கள்…………!
ஆனால் அத்தாயின் கழுத்திலே தொங்கிய தாலிக்கயிறு தடுத்து நிறுத்தியதால்……..
மனமுடைந்து படுத்த படுக்கையாய்க் கிடந்து தன் நிரந்தர உறக்கத்தை அவர்
தேடிக்கொள்ள………………..
தன்மனைவியின் நினைவாக அங்கு சிறுவர் பாடசாலை அமைத்துக்கொடுத்து தன்னை இனம்காட்டி நின்றார் மேகவல்லியின் தந்தை கருணைநாதன்.
அவரது முகத்திரையைக் கழித்தெறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதுபோல் பள்ளிப்பருவத்தை அடைந்துவிட்ட திவ்யாவும் அந்தக் கல்விக்கூடத்தில்
தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கியிருந்தாள்.
தன் தாயின் நினைவாலயத்தில் தன் மகள் கல்வி பயிலுவது இந்தத் தாய்க்கு ஆத்ம திருப்தி அளித்து நிற்க.
வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் பயிலும் அந்தப் பாடசாலையின் ஓய்வு நேரங்களின்போது…. மேகவல்லியின் சகோதரனது மகன் மணாளனுடன் திவ்யா விளையாடிக்கொண்டிருந்தாள்.
…சிவனேஸ்…
(ஈழமுரசு வாரமலர் பாரிஸ்-08.07.1999)