விடியும் ஒரு பொழுது.


தாயே   தமிழ்   மொழியே
வணங்குகிறோம்    நாமுன்னை
பிறந்த   நாட்டில்    நெருக்கடிகள்
பிறந்து   விட்ட   காரணத்தால்

பிறந்த   மண்ணில்   அகதிகளாய்
போக   இடம்    தெரியாமல்
தனித்து   தவித்திருக்க..  தமிழன்னை
புகலிடத்தில்   நாம்  வாழ்ந்தாலும்..

கண்டதில்லை   ஒரு  போதும்
தமிழ்   மொழிக்கு    நிகராக
வேறு   மொழி    உண்டென்று…!
வாழ்த்துகிறோம்   தமிழ்  வாழ..

உன்  வயிற்றில்   கருக்கட்டி
இப்பிறவி    கிடைத்ததனால்
பாக்கியமே    நாம்  செய்தோம்
போற்றுகிறோம்   தாய்   உன்னை.

அடுத்து   வரும்    சந்ததிக்கும்
ஊட்டிடுவோம்     தமிழ்   பாலை
தரணியெங்கும்    தமிழ்   மொழியை
நடை    பயில    வைத்திடுவோம்..

தத்தித்தத்தி தளிர்  நடைபோடும்
பிஞ்சுகளும்   தமிழ்   பேச
பேருவகை   கொண்டிடுவோம்
தாய்   உன்னை    துதித்திடுவோம்.

விடியும்    ஒரு   பொழுது
வேட்டொலிகள்   தீரும்..
கந்தக   காற்றுமங்கு  கலைந்தே  போகும்
சுதந்திரக்   காற்றை   நாம்
சுவாசமாய்    கொள்வோம்.

ஏய்ப்பவர்    எரித்திட்ட   எம்மண்ணில்
இல்லாமை    நீங்கி   நாம்
எல்லோரும்     ஒற்றுமையாய்
இன்புற்று    வாழ்வோம்.

…சிவனேஸ்…

மறுபடியும் மடுவுக்கு வரவேண்டும்

அன்னையே நீயும்
அகதியா அங்கு..?
ஏற்கப் பொறுக்காமல்
மனமோ அழுகிறது.எங்கு நடக்கிறது
இந்த கொடுமை
உலக கண்களும்
புதினம் பார்க்குது…!

போகுமிடம் தெரியாமல்
ஒடிவந்த எம்மையெல்லாம்
நேசக்கரம் நீட்டி
செஞ்சோடு அணைத்தாயே
மடுத்தாயே அம்மா

அன்னையுன்னை நம்பித்தானே
மடுப்பதியில் குடியிருந்தோம்
இடம்பெயர்ந்து சென்றதனால்- தாயே
ஆரெமக்கு துணையம்மா…?

அகதியாய் நீயும்
அலைவது பொறுக்காமல்
அழுவதை தவிர
நாமென்ன செய்வோம்.

தெய்வங்களும் தினசரி
தெருத்தெருவாய் அலைவது
எம் நாட்டைத்தவிர
வேறெங்கும் நடப்பதுண்டோ…?

பத்திரிகை பார்த்து
பதைத்தே போனோம்
அன்னையே நீயும்
அகதியாய் போனது.

திரும்பும் திசைகளும்
சோகங்கள் சொல்லுது.
சொந்தங்களை இழந்து
மனங்களும் ஏங்குது.

வஞ்சக வலைக்குள்
வதைபட்டு துடிக்கிறோம்
வார்தைகள் வருமா
வாய்விட்டு சொல்வதற்கு

பேச்சு சுதந்திரமும்
காற்றோடு போச்சுது.
பிறர் சொன்னால்…
கேட்க ஆசையாயிருக்குது.

மனமுருகி அழுது
மன்றாடி கேட்கின்றோம்
மறுபடியும் தாயே..
மடுவுக்கு வரவேண்டும்.

 

………………….
…சிவனேஸ் …

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1207838964&archive=&start_from=&ucat=3&

நேசிப்பாயா….?

இளமைப்   பருவமதில்
இதயத்து   நெருடல்களால்..
எனக்குள்ளே   வந்து..
உறவொன்றை   வளர்த்தவளே…!

காலச்    சக்கரத்துக்குள்
நாம்   கவிதைகளானபோது
கற்பனை   வானிலும்
சிறகடித்து    பறந்தவளே…!

திரும்பும்   திசைகளெல்லாம்
உன்முகமே   தெரிய..
துள்ளிய  மனதை
தொட்டுரசிச்    சென்றவளே…!

காதல்    சிறைக்குள்ளே
கட்டிவைத்து   எனக்கு
காதலை   கற்பித்து
கல்கண்டாய்   இருந்தவளே…!

சொந்தங்கள்   கூடியெம்மை
சேர்த்து    வைக்குமென்றாயே
சுகமாக    இருந்தது
சொன்னவுன்   வார்த்தை.

விதிவரைந்த     கோலத்தில்
விடு    கதையாவோமென்று
எண்ணியதும்   இல்லை
ஏனெமக்கு     தொல்லை…?

சொன்னால்   தீர்ந்திடுமா…?
சுமைகள்தான்    இறங்கிடுமா…?
சாதியும்   மதமுமிங்கு
கங்கடங்கள்   செய்தது    ஏன்..?

சாதி  பார்த்தா    காதலித்தோம்
தடுத்தெம்மை   நிறுத்துதற்கு.
மதம்   பார்த்தா   முடிவெடுத்தோம்
மனமிரண்டும்   சேர்வதற்கு…?

மங்கை   உனக்குள்ளே
வந்துதித்த   காதலை
மனமுவந்து   ஏற்றதை
மறந்தேனோ  போனாய்…?

வாடாத    மலரே
கூடாத   கற்பனையை
தேனோடு   கலந்துனக்கு
தின்றுவிடச்   சொன்னது   யார்..?

காதலுக்கு    மொழியில்லை
மதமும்  இல்லை
சாதியும்   இல்லை
சாட்சிகள்   மட்டும்தான்

மனங்கள்   இரண்டும்
மனம்   வைத்தால்
திசைமாறாது   காதல்
தெம்புடனே   செல்லும்…!

உண்மைக்  காதலுக்கு
இதுவொன்று   போதும்
பொருந்துமா   இது
பொய்யான   காதலுக்கு.

நீ  செய்த   காதல்
நிலையற்று    போனாலும்
இன்னும்   நினைக்கிறேன்
காதலியாக   உன்னை…!

…சிவனேஸ்…

மௌனவிரதம்.

மனவானில் வந்திருந்து
மகிழ்ந்து சிரிப்பது ஏன்..?
மத்தாப்பாய் என் மனமும்
மகிழ்ச்சியால் தினம் துள்ளுவதேன்..?

சொல்ல தெரியாத சுகத்தை..
அள்ளித்தந்த உன் விழிகளை..
மறக்க முடியாமல் மனமோ..
புதுக்கவிதை சொல்கிறது.

புரியாமல் நானோ உன்னை
தெரியாமல் சந்தித்த நாளை
நினைத்து நீ வருவாயென்று
காத்திருக்கிறேன் எதிர்பார்த்து.

வதைக்காதே கண்மணியே
வாடிவிடும் என் மனது.
தேடிவந்து நீதானே காதலை
என் காதுகளில் சொன்னாய்.

சொன்ன விதம் கண்டு
சொக்கி நான் போகையிலே
நாணத்தால் முகம் சிவந்து
நம்காதல் வாழுமென்றாய்.

மறந்திருக்கமாட்டாய் நீயும்..
மனமொத்த காதல் இது.
பதியம் வைத்த மனம்
பக்குவமாய் தானிருக்கும்.

வெல்லும் இக்காதலென்று
விடியும் பொழுதுகளில் மனதுள்
சிறகடித்து பறக்கிறது
சின்ன சின்ன ஆசைகள்.

புரிந்திருக்கும் இது உனக்கு
தெரிந்திருந்தும் ஏன்..? எதற்கு..?
காதலுக்கு மௌனவிரதம்
கண்மணியே நீயே சொல்..?

சிவனேஸ்

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1206724789&archive=&start_from=&ucat=3&

அகதிகளா நாம்…?

பிறந்த மண்ணில் அவலங்களா..?
பிறர் காணா துன்பங்களா..?
பெருமை சேர்த்த நாமெல்லாம்
பிறந்த நாட்டில் அகதிகளா..?

கொஞ்சி பழகி குதூகலமாய்
கூடி மகிழ்ந்த தெருக்களெல்லாம்
வெறிச்சோடிக் கிடக்குதங்கு…
நினைக்கையிலே கனக்கிறது நெஞ்சு.

ஓலை குடிசையிலும் நாம்
ஒற்றுமையாய் வாழ்ந்திருந்தோம்.
பாச வலை அறுத்து
பகைவன் எமை விரட்டியதேன்..?

ஆசையாய் கட்டிய கல்வீடுகளும்
அடுக்கடுக்காய் வளர்த்திட்ட ஆசைகளும்
கண்முன்னே இடிந்தங்கு
கண் நீராய் கரைகிறது.

ஈரமில்லா நெஞ்சத்தால் தினம்
இரக்கமின்றி வதை செய்தால்
போகுமிடம் நாம் எங்கு..?
பிறந்த மண்ணில் அகதிகளாய்…!

பிஞ்சுப்பருவத்திலும் பிடுங்கியெறிகின்றார்..
அரும்பி சிரிக்கும் மொட்டுக்களும்..
நடுங்கி நிலைகுலைந்து
அழுவதைப் பார் பீதியினால்…!

விதி வரைந்த கோலமென்று
வெதும்பி மனம் நோகிறது
விடியுமொரு பொன்னாள்
வேதனைகள் தீர்க்கும் அந்நாள்.

விடிந்திடவே துதிக்கின்றோம்
வேதனைகள் தீரும் என்று
அகதிகளும் நாங்களல்ல- மனம்
அறைகூவல் விடுக்கிறது.

சிவனேஸ்

ஓ மனமே…!

ஓ மனமே….
நான் சீண்டிப்பார்பதாய் எண்ணி
நீயேன் சினங்கொண்டு அழுகிறாய்…?
சிரிப்பதைவிட நானென் செய்வேன்.

கடந்து வந்த பாதைகளில்
நடந்து பதிந்த சுவடுகளை
பல ஆண்டுகள் கழிந்தாலும்…
மறக்காமல் நீ திரும்பிப்பார்.

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
ஏற்படுத்திய தாக்கங்கள் அங்கு
ஆண்டுகள் பல உருண்டோடியும்
உருக்குலையாமல் உயிரோடுதானிருக்கிறது.

காலச்சக்கரத்துக்குள் நசிந்து…
அவை அழிந்து காணாமல்
காலாவதியாகிவிட்டதாய் எண்ணினால்
மனமே அதுவுன் தவறு.

நீ ஏறிவந்த படிகளிலே
ஏதேனும் உடைந்து விட்டால்
இறங்கிப்போக முடியாது…
அந்தரமாய் தொங்க வேண்டும்.
அதுதான் உண்மை.

அடுக்கி சிலவற்றை
அழகாக சொன்னாலும்
தவறு இருக்கென்று
குறை படுதல் இயல்புதான்.

சகதியாய் கிடக்கிறது.
சமுதாயத்திலே பல சிக்கல்கள்
உடைத்தெறிய நீ வேண்டும்
இல்லையேல் மடைதிறந்து அதுவோடும்.

கிறுக்கிய சில வரிகள்
மனமுன்னை தாக்கியிருந்தால்
மன்னித்துவிடு என்னை
மறுபடியும் ஏனிந்த வம்பு.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

எரிச்சல் தரும் வேதனைகள்.

கவிதையொன்று நானெழுத
கனநாளாய் ஆசைப்பட்டு
காகிதம் நானெடுத்து
சிந்தனையில் வந்தவற்றை
சிதைக்காமல் எழுதிப்பார்த்தேன்.

சினமாக இருந்தது
சில வரிகள்.
சமூகத்தை சித்தரிக்க
அழுக்கான மனங்கள்தான்
அழகாக தெரிந்தது.

சாதியும் மதங்களும்
சங்கடங்கள் செய்வதுவும்
வேடிக்கை பார்க்கின்ற
விந்தை மனிதர்களும்
மதிப்புயர்ந்த மனிதர்களாம்.

மனமோ படம்பிடித்து
நெஞ்சத்தில் திரையிட..
கொஞ்சம் பார்ப்பதற்கே
நெஞ்சம் மறுத்தது.
நினைக்கவும் முடியவில்லை.

புரைக்யோடி கிடக்கின்ற
சகிக்க முடியாத
சமுதாய பிரச்சினைகள்
சகதிகளாய் தினமும்
தெருவெங்கும் கிடக்கிறது.

சீதனத்தை சிலரோ
அருவருப்பதாய் பார்த்தாலும்
அவரும் கேட்கிறார்
சீதனத்தை அதிகம்
இதைவிட விந்தையேது.

அழுவதா சிரிப்பதா
அழுக்கான மனங்களைப்பார்த்து.
சொல்வதொன்று செய்வதொன்று.
தெரியாமல் தானோ
பூமியும் சுழல்கிறது.

காதலைப் பார்த்தால்
பாதிதான் வெற்றி.
சாதியால் பிரிந்தது
சமாதியில் சங்கமம்
மனமோ தவிக்குது.

ஊனப்பட்டது உள்ளம்தான்
உண்மையைச் சொன்னால்
சமுதாயம் சிரிக்கும்
பொய்யை சொன்னால்
பொறுமையாய் இருக்கும்.

உப்பில்லாத உணவும்
உண்மையில்லாத பேச்சும்
உருப்படி என்றால்
உருப்படுமா சமுதாயம்
உணர்வுகள் கேட்கிறது.

எரிச்சல் தருகிறது
இந்த வேதனைகள்
என்ன செய்வது..
எழுதி பார்க்கவே
ஏற்காத மனது.

புரியுதா உனக்கென்று
என்னையே கேட்க
எழுதி பார்த்ததை
கசக்கி எறிந்துவிட்டு
கண்களை கசக்கினேன்.

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8283

உள்ளக்குமுறல்.

வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்து ஆடுது.
பாலகர் வயிறோ
பாலுக்கு அழுகுது.முன்னைய வாழ்வு
கண்ணுக்குள் தெரியுது.
முடிந்து போனதாவென்று
மனமோ ஏங்குது…!

சாவிலும் வாழ்ந்து
சந்தித்த அனுபவம்.
சங்கடங்கள் வந்தும்
சமாதானம் செய்யுது.

வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.

தென்னோலை தோரணங்கள்
அவ்வப்போ பார்த்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மங்கள வீடுகளில்..

கண் விழித்தபோதிப்போ
கண்ணுக்குத் தெரியுது.
குருத்தோலை தோரணமும்
மரண அழுகையும்.

ஆனாலும்….. எப்போ….
விடியுமென்ற ஏக்கம்.
விடிந்துவிட்டால் அழும்பிள்ளை
புட்டிப்பாலுக்கென்ற தவிப்பு.

சோதனைமேல் வேதனை..
அழ வேரூன்றியிருக்கிறது.
அழுவதற்கா பிறந்தார்கள்
அனாதைகளா இவர்கள்…?

பூமிப் பந்திலும்
நடக்குது சதிராட்டம்
பொறுத்திருந்து பார்ப்போம்
புலம்புது இவ்வுள்ளங்கள்.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

துன்பத்திலும் இன்பம்…!

கருமுகில்கள் வானத்தை கௌவ்வி
களி நடனம் செய்யும்.
வான்மகளோ கண்டு அங்கு..
கண்ணீர் சிந்தி அழுவாள்…!

பொங்கி எழும் நெஞ்சு…
பொறுக்க முடியாமல் தவித்து…
சத்தமின்றி யுத்தம் செய்து…
பூமித்தாயும் மனம் நோகும்.

ஆனாலும் வேடிக்கை இது…
வான்மகளின் கண்ணீர் துளிகள்
மழை துளிகளாய் மாறி
பூமியை வந்து சேர…

நாவறண்டு போன நாணல்களோ…
திருப்திகண்டு ஆடி மகிழும்.
துன்பத்திலும் இன்பம் இங்கு
இயற்கைக்கும் இது பொருந்துதுபார்…!

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

நினைவில் தவம்…!

கவிதை ஒன்று நானெழுத
தலைப்பு ஒன்று அனுப்பிவைத்தாய்.
உனக்குள் வந்து போவதெல்லாம்
எனக்குள் வருமா கவிதைகளாய்…?

வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.

தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.

சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே

பட்டுடுத்த மேனி என்பேன்..
பால் நிலவு தோற்றமென்பேன்
பூக்கள்கூட உனை கண்டால்
பொறாமை கொள்ளும் என்றிடுவேன்.

மென்மைச் சிரிப்பழகும்..
மேன்மைப் பேச்சழகும்..
பெற்றதனால் நீ எனக்கு
அழகிய தமிழும் ஆனாய்.

உன் கன்னக் குழிகழுக்குள்
கவிதைகளாய் பூத்திருக்க
கவிதை ஒன்று வேண்டுமென்று
கட்டளை ஏன் பிறப்பித்தாய்…

காரணமோ தெரியவில்லை இதை
யாரிடமும் கேட்கவில்லை…..
நவரசமாய் எனக்குள் நீ
நர்த்தனங்கள் தினம் செய்வதனால்.

முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா…?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்…

நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக் கொஞ்சம் கதைப்பதற்கு
நீண்ட நாள் யோசித்தேன்.
நிலவே உன்னை பார்ப்பதற்கு.

அழகு தமிழ் வார்த்தைகளை
அடுக்கடுக்காய் நான் கோர்த்து
வாய் உதிரும் புன்னகையால்
வான் உயர பாராட்ட

வானுயர நீ பறந்து
விண்மீனை நீயும் தொட்டு
நிலாவுக்கும் சொந்தம் என்று
என் நெஞ்சமதை குழப்பிவிட்டாய்

போதும் இது போதும்
புன்னகையால் எனை வாட்டியது
காணும் இனி காணும்
கனவுகளில் காதல் கொண்டதுவும்..

கீழ் வானம் சிவந்திருக்க
மேல் வானில் வந்திருந்து
வானத்து கன்னி நீ
விடியலுக்காய் காத்திருந்து
விடை பெற்று சென்றாயோ..
வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே…!

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7521

« முந்தைய இடுகைகள் அடுத்த பக்கம் » அடுத்த பக்கம் »